பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடவுள் ஒருவரே


இவ்வுலக நிகழ்ச்சியைக் கூர்ந்து நோக்குங்கால் காணப்படும் உலகம் ஒர் நிலையாகிய கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு நின்று செயற்படுதல் இனிது புலனாகும். இத்தகைய நியதியோடு பொருந்திய உலகின் இயக்கத்திற்கு வினைமுதலாய் (கருத்தாவாய்) உடன் நின்று இயக்கி நிற்கும் பேரறிவும் பேராற்றலும் பேரருளும் வாய்ந்த முழுமுதற் பொருளொன்று உலகுயிர்கட்குச் சார்பாயிருத்தல் வேண்டும் என்பது அறிஞர் பலரும் ஒப்ப முடிந்த உண்மையாகும். இங்ங்னம் எல்லார்க்கும் புலனாகும் நிலையில் காணப்படும் உலக நிகழ்ச்சியாகிய காரியத்தை அடிப்படையாகக் கொண்டு இக்காரியத்துக்குரிய கர்த்தாவாய் உலகுயிர்களை உடன்நின்று இயக்கி யருளும் முழுமுதற் பொருளாகிய கடவுள் ஒன்று இருத்தல் வேண்டும் என்பதனை உலத்தாருக்கு உணர்த்தக் கருதிய திருவள்ளுவர் 'அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி, பகவன் முதற்றே உலகு' (1) எனவரும் திருக்குறளால் எடுத்துரைத்தார். இத்திருக்குறள் காண்டற்கரிய கடவுளின் உண்மையினைக் கருதலளவையால் நிறுவுவதாகும். "எழுத்துக்களெல்லாம் தம்மை உடனிருந்து செலுத்தும் அகர ஒலியினைத் தமக்கு முதலாக உடையன. அதுபோல, உலகமும் தன்னை உடனிருந்து இயக்கி நிற்கும் ஆதிபகவனாகிய இறைவனைத் தனக்கு முதலாக உடையது” என்பது இப்பாடலின் பொருளாகும். இதன்கண் "உலகு" என்றது, உடம்பொடு காணப்பெறும் உயிர்த்தொகுதியினை. ஒர் வரையறையுடன் காணப்படும் இவ்வுலக