பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

283


பதற்குத் திருவுளங்கொண்டு அருட்பெருஞ்சோதியராகி நான் எவ்விதத்தும் அறிதற்கரிய உண்மைப் பேரறிவை யறிவித்தும் நான் எவ்விதத்தும் காண்பதற்கரிய உண்மைக் காட்சிகளைக் காட்டுவித்தும் நான் எவ்விதத்திலும் செய்தற்கரிய உண்மைப் பெருஞ்செயல்களைச் செய்வித்தும் நான் எவ்விதத்தும் அடைவதற்கரிய உண்மைப் பெரு நன்மைகளை அடைவித்தும், நான் எவ்விதத்தும் அனுபவித்தற்கரிய உண்மைப் பேரனுபவங்களை அனுபவிப்பித்தும் எனது அகத்திலும், புறத்திலும் இடைவிடாது காத்தருளியெனது உள்ளத்திலிருந்து உயிரிற்கலந்து பெருந்தயவாற் றிருநடஞ் செய்வித்தருளுகின்றீர்' என அருட் பெருஞ்சோதி ஆண்டவரை நோக்கி வள்ளலார் கூறிய இப் பெருவிண்ணப்பத்தில் இறைவன் தமது ஊன் உடம்பினைச் சுத்ததேகம், பிரணவதேகம், ஞானதேகங்களாக முறையே மாற்றி, தத்துவங்கள் எல்லாவற்றையும் தன் சுதந்தரத்தால் நடத்துகின்ற வல்லபத்தையும், கடவுள் ஒருவரே என்ற உண்மை ஞானத்தையும் கரும சித்தி, யோகசித்தி, ஞானசித்தி முதலிய எல்லாச் சித்திகளையும் அவற்றால் அடைதற்குரிய உண்மைப் பேரனுபவங்களையும் வழங்கியருளிய அருள் திறத்தினை நம்மனோர் உணர்ந்து தெளியும்படி விரித்து விளக்கி யுள்ளமை காணலாம்.

காற்றாலே புவியாலே ககனமத னாலே
      கனலாலே புனலாலே கதிராதியாலே
கூற்றாலே பிணியாலே கொலைக் கருவியாலே
     கோளாலே பிற இயற்றும் கொடுஞ் செயல்களாலே
வேற்றாலே யெஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
     மெய்யளிக்கவேண்டு மென்றேன் விரைந்தளித்தான் எனக்கே