பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

306


ஆறுமுக நாவலர் தமிழ்நாட்டிற்கு வந்து சிதம்பரத்தில் சைவப்பிரகாச வித்தியாசாலையை நிறுவினார். செந்தமிழும் சிவநெறியும் தழைத்தோங்குதற்கெனவே தமது வாழ்க்கை முழுவதும் பிரமச்சரிய நிலையைக் கடைப்பிடித்து ஒழுகிய தவச்செல்வராகிய அவர் தமிழோடு, ஆங்கிலமும், வடமொழியும் கற்றவர். தமிழ் மாணவர்கள் தம் இளம் பருவ முதல் படிப்படியாகக் கற்றற்குரிய தமிழ்ப்பாடி நூல்களை முதற் பாலபாடம், இரண்டாம் பாலபாடம், மூன்றாம் பாலபாடம், நான்காம் பாலபாடம் எனப் படிப்படியே எழுதி உதவினார். தொல்காப்பியம், திருக்குறள். பரிமேலழகர் உரை, அகத்தியத்தேவாரத் திரட்டு, திருவாசகம் திருக்கோவையார், திருத்தொண்டர் புராணம், கந்தபுராணம், திருவிளையாடற்புராணம் முதலிய இலக்கண இலக்கிய நூல்களையும், நன்னூல் விருத்தியுரை, இலக்கணக்கொத்து நிகண்டு முதலிய கருவி நூல்களையும், கோயிற்புராணம், சைவசமயநெறி முதலிய பல நூல்களையும் பிழையறப் பதிப்பித்து உதவினார். தமிழ்மொழியினைப் பிழையறக் கற்றற்கு உறுதுணையாக நன்னூற் காண்டிகையுரை, இலக்கண வினாவிடை இலக்கணச் சுருக்கம், ஆகிய புது நூல்களை இயற்றினார். திருத்தொண்டர் புராணம், கந்த புராணம் ஆகிய புராணத்தினை உரைநடையாக யாவரும் கற்றுணரும்படி அவற்றை வசனநடையில் வரைந்தும், பெரியபுராண வரலாற்றின் நுட்பங்களைக் கற்போர் உணர்ந்து பிறர்க்கும் எடுத்துரைத்துப் பயன்விளைக்கும் முறையில் உரைநடையில் சூசனம் (விளக்கம்) எழுதியும் சிவநெறிப்பணி புரிந்தார். தமிழ்ச் சுவை நயங்களையும், சமய உண்மைகளையும் புலரும் உணர்ந்து பயன்பெறும் முறையில் தமது நாவன்மை தோன்றச் சொற்பொழிவாற்றி நாவலர் என்னும் சிறப்புக்குரியவரானார். சைவர்கள் இளம்பருவ முதல் இன்றியமையாது மேற்கொள்ளுதற்குரிய கடமை