பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

343


இவ்வாறு குறிப்பிட்ட சில சொற்களை எடுத்துக் கொண்டு, அவற்றின் முதலிலும், இடையிலும், கடையிலும் நின்ற எழுத்துக்களைத் தனித்தனியே பிரித்து வெவ்வேறு சொற்களாக்கிக் குறிப்பினால் பொருளுணர்த்தும் முறையில் வள்ளலார் பாடிய பாடல்கள், எழுத்தியலமைப்பில் 'மிறைக் கவி' (சித்திரகவி) புனையும் அவர் தம் புலமைத் திறத்துக்கு எடுத்துக் காட்டாகத் திகழ் கின்றன.

வறுமையால் வருந்திய நாங்கள், ஈகைக் குணமில்லாத புல்லரை அணுகித் தாதா (வள்ளலே) எமக்கு வேண்டும் பொருளைத்தா (தருவாயாக) எனக் கேட்டுப் பயன்சிறிதும் பெறாது அலைந்து வருந்தினோம். ஒளி மழுங்காத மாணிக்க மணியே! திருவைந்தெழுத்தின் பொருளாகத் திகழ்பவனே! எம் தந்தையே! என உனது பெரும்புகழைப் போற்றித் துதித்து உய்தி பெறும்படி (எம் தலைமேல் நான்முகன்) எழுதாக்குறைக்கு நாங்கள் என்ன செய்ய முடியும், இதுவரையில் பட்டதுன்பம் எங்களுக்குப் போதாதா - என எல்லாம் வல்ல இறைவனை நோக்கி வருந்தி முறையிடும் நிலையில் அமைந்தது,

தாதாதா தாதாதா தாக்குறைக்கென் செய்குதும்யாம்
தாதாதா என்றுலகில் தான் அலைந்தோம்-போதாதா
நந்தா மணியே நமச்சிவாயப் பொருளே
எந்தாய் எனப் புகழவே.

(2725)

எனவரும் வெண்பாவாகும். இதன் முதலடியில் தா, தா, தா, தா, தா, தா, தா என வந்துள்ள ஏழு தா என்னும் எழுத்துக்களின் பின் 'குறை' என்ற சொல்லை இயைத்தால் ஏழுதாக்குறை என்றாகும். ஏழு தாக்குறை = எழுதாக்குறை; என்றது, படைத்தற் கடவுளாகிய நான்முகன் உயிர்களை, மக்களுடம்போடு படைக்கும்