பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

354


உணர்ந்தவர் தமக்கும் உணர்வரி யவன்என்
     உள்ளகத் தமர்ந்தனன் என்றாள்
அணிந்தனன் எனக்கே அருள்மண மாலை
     அதிசயம் அதிசயம் என்றாள்
துணிந்துநான் தனித்தபோது வந்தென்கை
     தொட்டனன் பிடித்தனன் என்றாள்
புணர்ந்தனன் கலந்தான் என்றுளே களித்துப்
     பொங்கினாள் நான்பெற்ற பொன்னே

(8680)

எனவரும் பாடலாகும். 'இது வனபவள வாய் திறந்து வானவர்க்கும் தானவனே என்கின்றாளால்' எனத் திருநாவுக்கரசர் அருளிய திருப்பதிகப்பொருளை அடி ஒற்றியமைந்துள்ளமை காணலாம். இத்துறையில்,

ஏலுநன் மணிமா மன்றருட் சோதி
     என்னுளத் தமர்ந்தனன் என்றாள்
பாலுமின் சுவையும்போன்றென தாவி
     பற்றினன் கலந்தனன் என்றாள்
சாலும்எவ் வுலகும் தழைக்கஎன் தனக்கே
     சத்தியை அளித்தனன் என்றாள்
மேலும்எக் காலம் அழிவிலேன் என்றாள்
     மிகுகளிப்புற்றனள் வியந்தே.

(5689)

எனவரும் பாடல் இராமலிங்க அடிகளாகிய நாயகி தன் ஆருயிர்த்தலைவன்பால் பெற்ற பேரின்ப நிலையைப் புலப்படுத்தல் காணலாம்.

தேவர்கோவறியாத தேவதேவனாகிய தலைவனை விரும்பிய தலைவி, அவன்பால் கொண்ட அன்புரிமைத் திறத்தினைத் தன்னுடைய தோழிக்கு எடுத்துரைப்பதாக அமைந்தது, 'தோழிக்குரிமை கிளத்தல்' என்னும் பதிகமாகும். அதன் முதற்பாடல்,