பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

353


பெருவாய்மைத் திறம் சிறிதும் பேச முடியாதே
     பேசுவதார் மறைகள் எலாம் கூசுகின்ற என்றால்
துருவாமல் இங்கெனக்குக் கிடைத்ததைஎன் சொல்வேன்
     சொல்அளவில் லாதசுகம் தோன்றுவ தென்தோழி.

(5625)

என்பது 'திருவடிப்பெருமை' என்ற தலைப்பில்அமைந்த முதற்பாடலாகும். தலைவி தலைவன் செயலைத் தாய்க்கு உரைப்பதாக அமைந்தது,

அன்னப் பார்ப்பால் அழகாம் நிலையூடே
     அம்பலம் செய்துநின் றாடும் அழகர்
துன்னப்பார்த் தென்னுயிர்த் தோழியும் நானும்
     சூதாடுகின்ற அச்சூழலில் வந்தே
உன்னைப் பார்த்துன்னுள்ளே என்னைப் பாராதே
     ஊரைப் பார்த்தோடி உழல்கின்ற பெண்ணே
என்னைப் பார் என்கின்றார் என்னடி அம்மா
     என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா

(5670)

என வரும் பாடலாகும். இதன்கண் அம்பலத்திலாடும் அழகராகிய இறைவர் தலைவியும் தோழியும் விளையாடும் இடத்திலே வந்து தலைவியை நோக்கி 'உன்னைப் பார்த்து உன்னுள்ளே என்னைப் பாராதே. ஊரைப் பார்த்து ஓடி உழல்கின்ற பெண்ணே, என்னைப்பார்' எனக் கூறியது, உயிர்க்குயிராகிய இறைவன் ஆன்மாவை நோக்கி, 'புறப்பொருள்களில் உள்ளத்தைச் செலுத்தாமல் உன் உள்ளத்துள்ளே உயிர்க்குயிராய்த் திகழும் என்னைக் கண்டு உய்தி பெறுவாயாக' என அறிவுறுத்திய உபதேசப் பொருளை உளங்கொண்டதாகும்.

இறைவன்பால் காதல்கொண்ட தன் மகளது நிலைமை குறித்துச் நற்றாய் செவிலிக்குக் கூறுவதாக அமைந்தது,