பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

355


நயந்தநட நாயகர் உன்நாயகரே எனினும்
     நாடியமந் திரங்கள்சில கூடிஉரை யிடவே
வியந்து மற்றைத் தேவர்எலாம் வரவும் அவர்நேயம்
     விரும்பாதே இருப்பதென்நீ என்கின்றாய் தோழி
வயந்தரும் இந்திரர் பிரமர் நாரணர்கா ரணர்கள்
     மற்றையர்கள் மற்றையர்கள் மற்றையர்கள் எவர்க்கும்
பயந்தகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே
     பதிநடஞ்செய் அடிப்பணிக்கே பதித்தகுடி அறியே.

(5690)

எனவரும் பாடலாகும். இதன்கண் நடராசப்பெருமான் உன் ஆருயிர்த்தலைவராயினும் மறைமொழி மந்திரங்களால் ஏனைய தேவர்களெல்லாம், அவ்விறைவரை யடைந்து வழிபடுகின்றார்கள். நீ அத்தேவர்கள் பால் அன்பு செலுத்தாது இருப்பதன் காரணமென்ன, என வினவிய தோழியை நோக்கி 'இந்திரர், பிரமர், நாரணர், காரணர் முதலிய யாவர்க்கும் பயந்தகுடி நானல்லடி, திருச்சிற்றம் பலத்தே நடஞ்செய்யும் திருவடிக்கே அடிமை செய்யும் குடியானேன்யான்' எனத் தலைமகள் மறுமொழி கூறுவதாக அமைந்த இப்பாடல், "நாமார்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம் ... ... சங்கவெண் குழையோர் காதிற் கோமாற்கேநாம் என்றும் மீளா ஆளாய்க் கொய்ம் மலர்ச் சேவடியிணையே குறுகினோமே" (6-98-1) எனவும்,

என்று நாம் யாவர்க்கு மிடைவோம் அல்லோம்
இருநிலத்தில் எமக்கெதிர் ஆவாருமில்லை
சென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோ மல்லோம்
சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோம்.

(6–98–5)

எனவும் வரும் திருநாவுக்கரசர் வாய்மொழியையும்,