பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

369



கனிப்படு மெய்ச் சுத்தசிவ சுழுத்தியிலே களித்தேன்
     கலந்துகொண்டேன் சுத்தசிவ துரியநிலை அதுவாய்ச்
செனிப்பிலதாய் எல்லா மாய் அல்லதுவாம் சுத்த
     சிவதுரியா தீதத்தே சிவமயமாய் நிறைந்தேன்
இனிப்புறு சிற்சபை இறையைப் பெற்ற பரிசதினால்
     இத்தனையும் பெற்றிங்கே இருக்கின்றேன் தோழி

(5809)

எனவரும் பாடலில் குறிப்பிட்டுள்ளமை காணலாம்.

வினவு தெரியாத இளம் பருவத்திலே உயிரிற் பிரிவின்றிக் கலந்து கலந்து இனிமை தரும் பெருந்தலைவராகிய நடராசப் பெருமான் என்னை வலிந்து அழைத்து ஐந்தொழில் ஆடலை நிகழ்த்தும் தம் திருவடிக்கே யான் பாடல் செய்து போற்றுமாறு பணித்தருளினார். அடக்கமில்லாத மனத்தையுடைய சிறியேன் செய்த குற்றங்களை யெல்லாம் அழகிய விளையாட்டுச் செயல்களெனக் கொண்டு பொறுத்தருளி எனக்கு மணமாலையணிந்து என்னைக் கூடினார். அருளும் ஞானமும் உடைய அப்பெருந்தலைவர் என்னைப் புறத்தே கலந்த கலப்பு உயிராகிய என்னை ஈறிலாப்பெருவாழ்வில் இன்புற்று ஓங்க அருளியது. அத்தலைவர் என் உயிரிற் கலந்து ஒன்றிய அகப்புணர்ச்சியால் விளைந்த இன்ப அநுபவத்தின் அளவு சொல்லால் வெளியிட்டுரைக்கும் தரத்ததாமோ? எனத்தலைவி ஆருயிர்த்தலைவனாகிய இறைவனால் தான் பெற்ற முடிவிலாப் பேரின்ப நிலையை யெடுத்துரைப்பதாக அமைந்தது,

அறியாத பருவத்தே என்னை வலிந்தழைத்தே
     ஆடல் செயும் திருவடிக்கே பாடல் செயப்பணித்தார்
செறியாத மனச்சிறியேன் செய்த பிழையெல்லாம்
     திருவிளையாட்டெனக் கொண்டே திருமாலை அணிந்தார்