பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48


மனமது நினைய வாக்கு வழுத்த மந்திரங்கள் சொல்ல
இனமலர் கையிற் கொண்டங் கிச்சித்த தெய்வம்போற்றிச்
சினமுத லகற்றி வாழும் செயலறமானால் யார்க்கும்
முனமொரு தெய்வம் எங்கும் செயற்கு முன்னிலையாமென்றே

எனவரும் சிவஞான சித்தியார் (113 சுபக்கம்) திருவிருத்தத்தாலும் நன்கு விளங்கும்.

தெய்வம் உண்டென்னும் தெளிவுடைய அகச்சமயத்தார் செய்யும் வழிபாடு முழுமுதற் கடவுளை அடையும் படிச்செய்யும் என்பதனை ஒத்துக் கொள்வதில் தடையில்லை. தெய்வங்கொள்கையேயில்லாத புறச்சமயத்தார் தத்தம் சமயத் தலைவர்களை நோக்கிச் செய்யும் வழிபாடுகள் முழுமுதற் பொருளாகிய இறைவனைச் சார்தல் எவ்வாறு பொருந்தும்? என்பதொரு வினா இவ்விடத்தில் எழுவது இயல்பு. எல்லாம் வல்ல இறைவன் உயிர்க்குயிராய் யாண்டும், நீக்கமற நிறைந்துள்ளான் என்பது சான்றோர் துணிபாதலின் புறச்சமயத் தலைவர்களிடத்தும் அம்முதல்வன் இடங்கொண்டுள்ளான் என்பது தெளிவு. எனவே அச்சமயத்தலைவர்களை நோக்கிச் செய்யும் வழிபாடுகளையும் அவர்கள் வழியாக இறைவன் ஏற்றுக் கொள்கிறான் என்பதில் சிறிதும் ஐயுறவில்லை. இந்நுட்பம், சிவபெருமானை நினையாமலும், திருவைத் தெழுத்தினை முறைப்படி ஒதாமலும், பச்சிலையும் நீருங்கொண்டு வழிபாடு செய்யாமலும் வேறு யாராகவோ நினைக்கும் புறச்சமயத்தார் உள்ளத்திலும் இடைமருதீசனுடைய பொன்னார்