பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61


இவ்வாறு இறைவனை அகத்தும் புறத்தும் ஒளியுருவினனாக வைத்துப் போற்றும் வழிபாட்டு நெறியே இறைவன் ஆலநிழலில் அமர்ந்து அருந்தவ முனிவர் நால்வர்க்கும் அறிவுறுத்திய ஒளி நெறியாகும் என்பதனை,

'ஒரால் நீழல் ஒண்கழல் இரண்டும்
முப்பொழு தேத்திய நால்வர்க்கு ஒளிதெறி
காட்டினை'

(1-12-618)

எனவரும் திரு எழுகூற்றிருக்கைத் தொடரில் ஆளுடைய பிள்ளையார் தெளிவுபடக் கூறியுள்ளமை காணலாம். இங்ங்ணம் சோதிப் பொருளாக இறைவனைப் போற்றி வழிபடும் இவ்வொளிநெறியினையே திருவாதவூரடிகள் சிறப்பு வழிபாடாகக் கொண்டனர் என்பது,

'ஆதியும் அந்தமு மில்லா அரும்பெருஞ் சோதியை'
'கேழில் பரஞ்சோதி கேழில்பரங்கருணை',
'சோதியாய்த் தோன்றும் உருவமே'.

என்றாங்கு வரும் திருவாசகத் தொடர்களால் இனிது விளங்கும். அறிவினாற் சிவனேயாகிய மணிவாசகப் பெருந்தகையார் அருளிய திருவாசகத்தேனை இடைவிடாது பருகி இன்புற்ற இராமலிங்க வள்ளலார், வாதவூர் அடிகள் அறிவுறுத்திய சோதி வழிபாடே இக்காலத்தில் சமய வேறு பாடின்றி எல்லாமக்களையும் தம்பால் ஈர்க்கவல்லது என்னும் மெய்ம்மையைத் தெளிந்து 'அருட்பெருஞ்சோதி, அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி' என்னும் மெய்ம் மொழியைச் சோதி வழிபாட்டிற்குரிய திருமந்திரமாக அறிவுறுத்தருளிய திறம் இங்கு மனங்கொளத்தகுவதாகும். இம்மந்திரத்தில் அமைந்த அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை என்றதொடர்கள் திருவாதவூரடிகள் அருளிய திருவெம்பாவை எட்டாம் திருப்பாடலில்