பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73


அன்பினைப் பெருக்குவதற்கே உயிர்கட்கு என்போடியைந்த இவ்வுடம்பு கொடுக்கப்பெற்ற தென்பது,

அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்
கென்போ டியைந்த தொடர்பு (73)

என வரும் பொது மறையாற் புலனாகும்.

மகிழ்தி மடநெஞ்சே மானுடரில் நீயும்
திகழ்தி பெருஞ்சேமஞ் சேர்ந்தாய் - இகழாதே
யாரென்பே யேனும் அணிந்துழல்வார்க் காட்பட்ட
பேரன்பே யின்னும் பெருக்கு

(அற்புத-31)

என வரும் காரைக்கால் அம்மையார் அருளிச் செயலும்,

'அழலார் வண்ணத் தம்மானை அன்பிலணைத்து வைத்தேனே'

எனவரும் அப்பர் (4-15-7) அநுபவமொழியும் இங்கு ஒப்பு நோக்கி உணரத்தக்கனவாகும். அன்பு என்பது சிவதத்துவ விளக்கமே என்பதும் அவ்விளக்கத்தை முழுவதும் பெற்றோர் சிவத்தோடு பிரிவின்றி யுடனாம் வீடு பேற்றினைப் பெற்றவராவார் என்பதும் உணர்த்துவார், 'அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே' என்றார். தெளிவு பற்றி அமர்ந்திருந்தார் என இறந்த காலத்திற் கூறினார். இங்கு அறிதல் என்பது அழுந்தியறிதலாகிய அநுபவத்தினை.

முன்புசெய் தவத்தின் ஈட்டம் முடிவிலா இன்பமான
அன்பினை எடுத்துக்காட்ட அளவிலா ஆர்வம் பொங்கி
மன்பெருங் காதல்கூர வள்ளலார் மலையை நோக்கி
என்புநெக்குருகி யுள்ளத் தெழுபெரு வேட்கையோடும்

(பெரிய புராணம்-கண்-102)