பக்கம்:திருவருட் பயன்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

பொருளுரைக்குமிடத்து இன்றென்பது என்புழி, ‘ஐந்தவித்தான் ஆற்றல்’ (திருக்குறள்-25) என்புழிப்போல நான்காம் வேற்றுமையுருபு செய்யுள் விகாரத்தால் தொக்கதாகக் கொள்ளுதல் வேண்டும்.ஆன்மாக்கள் தம் அனுபவ நிலையில் அறிந்துணரத்தக்க பிறவித்துன்பத்தையும், பிறவிப் பிணிப்பை யகற்றி அடைதற்குரிய பேரின்ப நிலையையும் அப்பேரின் பத்தினை வழங்குதற்குத் தோன்றாத் துணையாயுள்ள கடவுளையும் உள்ளவாறு அறிந்துகொள்ள முடியாமலிருத்தற்கு அவ்வுயிர்களை அனாதியே மறைத்துள்ள இருள்மலமே காரணமாம் எனக் கருதலளவையால் ஆணவமலத்துண்மை கூறியவாறு.

இருள்மலம் ஆன்மாக்களை எவ்வாறு மறைத்துள்ளது? என வினவிய மாணாக்கர்க்கு இருள்மலத்தின் மறைப்பு இத் தன்மையதென அறிவுறுத்துவதாக அமைந்தது, அடுத்துவரும் குறட்பாவாகும்.

         22. இருளான தன்றி இலதெவையும் ஏகப்
             பொருளாகி நிற்கும் பொருள்.

இ-ள்: உலகத்து வெவ்வேறு பலவகைப்பட்ட குணங்களையுடைய பொருள்கள் எல்லாவற்றினையும் ஒரு பொருளாக வேற்றுமை தோன்றாது மறைத்துக்கொண்டு நிற்பது இருளுருவானதற்கன்றிப் பிறிதொரு பொருட்கில்லை என்க.

ஆதலால் பிறப்பிறப்புக்களும், வீட்டுநெறியும், காரணங்களும் பகுத்தறியாதபடி மறைத்தது ஆணவம் என்பதாயிற்று.

இவை இரண்டுபாட்டானும் ஆணவத்தினது உண்மையும் அஃது இருள்போல மருள்விளைவிற்றென்பதூஉம் கூறட்பட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/75&oldid=514988" இலிருந்து மீள்விக்கப்பட்டது