பக்கம்:திருவருட் பயன்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61

இவ்விருள்மலம், உயிர்களை அனாதியே பற்றியுள்ள தென்பதனைவிட இடையில் வந்தேறியது எனக் கூறலாகாதோ என வினவிய மாணாக்கர்க்கு, மலம் அனாதி என அறிவுறுத்துவது அடுத்துவரும் குறட்பாவாகும்.

      28. ஆசாதி யேலணைவ காரணமென் முத்திநிலை
          பேசா தகவும் பிணி.

இ-ள்: அவிச்சை இடையிட்டு வந்ததாயின், அஃதோர் காரணமில்லாமல் வந்து பொருந்திய தென்னை? அன்றி முத்தியினும் உரையாடாது வந்து கவர்ந்து கொள்ளுமன்றோ என்க.

உரையாடாத கவர்தல், தோன்றாது விரைவிற் கவர்தல் இதனால் அவிச்சை ஆதி என்பாரை மறுத்துக் கூறப்பட்டது.

விளக்கம்: இருள்மலம் அனாதி என்பது உணர்த்துகின்றது.

ஆசு ஆதியேல் அணைவகாரணம் என்? முத்திநிலை{யினும் பிணி பேசாது அகவும் என இயைத்துரைக்க. ஆசு-(ஆணவ மலமாகிய) அழுக்கு; அவிச்சை. ஆதி-முன் ஒருகாலத்தில் இல்லாதிருந்து இடையே ஒருகாலத்தில் வந்து தோன்றியது. இடையே தோன்றியதன்றி முன்னமேயுள்ளதனை அனாதி என வழங்குவர். முத்தி நிலையினும் என உருபும் உம்மையும் விரித்துப் பொருளுரைக்கப்பட்டது. பேசாது அகவுதல், உரையாடாது கவர்தல்; என்றது. எத்தகைய முன்னறிவிப்பு மின்றி விரைவில் வந்து பற்றிக்கொள்ளுதல். இனி முத்தி நிலை பேசாது எனவும் பிணி அகவும் எனவும் இயைத்து, மோட்ச நிலையுண்டென்று சொல்லவேண்டுவதில்லை; பிணி மீளவும் வந்து பொருந்தும் எனப் பொருளுரைப்பர் சிந்தனையுரையாசிரியர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/84&oldid=515362" இலிருந்து மீள்விக்கப்பட்டது