பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இல்லற வியல்

இ-ள்:- தீய வழுக்கியும் வாயால் சொல் - தீமை பயக்கும் சொற்களை மறந்தும் வாயாற் சொல்லுதல், ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாது - ஒழுக்கம் உடையாருக்கு இயலாது. [ஏகாரம், அசை.]

இஃது, ஒழுக்கமுடையார் தீய சொற்களைச் சொல்லா ரென்றது. ௧௩௯.

ழுக்கம் விழுப்பம் தரலால் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

இ-ள்:- ஒழுக்கம் விழுப்பம் தரலால் - ஒழுக்கமுடைமை மேன்மையைத் தருதலானே, ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் - அவ் வொழுக்கத்தைத் தனது உயிரைக் காட்டினும் காக்கவேண்டும்.

[படும் என்பது வேண்டும் என்னும் பொருளில் வந்தது.]

மேற்கூறிய நன்மையெல்லாம் தருதலின் ஒழுக்கத்தினைத் தப்பாமல் செய்ய வேண்டு மென்று இது வலியுறுத்தியது. ௧௪0.

௧௫-வது.-பிறனில் விழையாமை.

பிறனில் விழையாமையாவது, பிறனுடைய மனையாளது தோள் நலம் விரும்பாமை. [இது, விலக்கவேண்டிய தீயொழுக்கங்களிலெல்லாம் முதன்மைவாய்ந்த தாதலால், ஒழுக்கமுடைமையின் பின் கூறப்பட்டது.]

றனியலான் இல்வாழ்வான் என்பான், பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.

இ-ள்:- அறன் இயலான் இல்வாழ்வான் என்பான் - அற நெறியானே இல்வாழ்வான் என்று சொல்லப்படுமவன், பிறன் இயலாள் பெண்மை நயவாதவன் - பிறன் வழியில் செல்பவளது பெண்மையை விரும்பாதவன்.

[பெண்மை என்பது அவளது நலத்தை உணர்த்தி நின்றது.]

இது, பிறனில் விழையாமை வேண்டு மென்றது. ௧௪௧.

௫௨