பக்கம்:திருவாசகத்தேன்.pdf/103

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்

காடு அனைய திருமேனியுடையவன். இவ்வளவு சிறப்புக்களும் உடைய இறைவன் என்னை எடுத்தாளாமல் விடக்கூடாது!

நான் ஐந்து மலங்களின் சுழலில் கிடந்து உழல்கின்றேன்; கரையேறுவது தெரியாமல் தத்தளிக்கிறேன். ஆணவம் என்னைக் குருடாக்குகிறது; இருட்டறையில் கிடத்தியிருக்கிறது; மூலையில் முடக்கிப் போட்டு விட்டது.

ஆன்மாவுக்கு ஆணவம் ஒர் அழுக்கு. அதனாலேயே ஆணவமலம் என்ற வழக்கு வந்தது போலும்! ஆன்மாவுக்கு ஆணவத்துடன் உள்ள சம்பந்தம் அநாதியானது. ஆணவமலம் ஆன்மாவைச் சிற்றறிவு உடையதாக்குகிறது. சிறு தொழில் உடையதாகச் செய்கிறது. ஆன்மாவைச் சிறுமைத்தனம் பொருந்திய நிலையதாக்குவது ஆணவத்தின் இயல்பு. ஆன்மாக்கள் தோறும் ஆணவத்தின் பந்தம் கூடும்; குறையும். இயல்பாக ஆன்மாவுக்கு அறிவு உண்டு; தொழில் உண்டு. ஆயினும் ஆன்மா ஆணவத்துடன் கலந்திருந்ததாலே ஆணவம் அறிவை மறைத்து விட்டது. தொழிலையும் மறைத்து விட்டது. இருளிடைப்பட்ட கண், ஒன்றையும் காணாது. அதுபோல இருள் மலமாகிய ஆணவத்தின் வயப்பட்ட ஆன்மாவின் நிலையும் ஆனது; அதனால் ஆன்மா தன்னையும் காண இயலவில்லை; தன்னுடைய தலைவனையும் உணர இயலவில்லை. இது ஆணவத்தின் மூல நிலை. ஆன்மா திருவருட் துணையால் பிறவி எடுத்து வினைகள் இயற்றும் போது ஆன்மாவின் ஆணவம் கேடே செய்கிறது. ஆன்மா வினைகள் இயற்றும் போதும் இன்பதுன்பங்களை நுகரும்போதும் "நான் செய் கிறேன்", "நான் நுகர்கிறேன்" என்று எண்ணி செருக்கடையச் செய்கிறது. இதுவே, ஆணவத்தினைச் சார்ந்த ஆன்மாவின் நிலை. ஆணவம், ஆன்மாவை இயல்பாக எப்போதுமே பற்றியிருப்பதால் இதை "மூல நோய்"