பக்கம்:திருவாசகத்தேன்.pdf/133

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்

அன்பின் ஆற்றல் தெரிந்தது. முடிவு என்ன? பொருட்பற்றிச் செய்கின்ற பூசைகள் இறைவன் விரும்புவை அல்ல. அருச்சனை என்னும் வெறும் வயல் மட்டுமே பரந்து கிடந்தால் பயனுண்டோ? அந்த் அர்ச்சனை வயலுள் அன்பை விதைக்க வேண்டாமா? இறைவன் மலைத்தான்! ஆனால், அன்பெனும் பிடியுள் அவன் சிக்குவான்! சிவகோசரியார் செய்த பூசை பொருளைப்பற்றிச் செய்த பூசை. திண்ணனார் செய்த பூசை அன்பு பற்றிச் செய்த பூசை. அதனாலன்றோ சிவகோசரி யாருக்குக் கண்ணிடந்து அப்பும் பேறு கிடைக்கவில்லை. திண்ணனாருக்கே அந்தப் பேறு கிடைத்தது. ஏன் கண்ணிடந்து அப்ப வேண்டிய நிலை: காளத்தியப்பருக்குக் கண்ணில் உதிரங் கொட்டல் நோய், வரவழைத்துக் கொண்ட நோய். திண்ணனாரின் அன்பை- அன்பின் பெருக்கை அளந்து காட்ட வேண்டும், சிவகோசரி யாருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும்! அன்பைப் புலப்படுத்துவன, அன்பின் அளவைப் புலப்படுத்துவன. கண்கள்தாம். திண்ணனாரின் அன்பை யாருடைய கண்கொண்டு அளப்பது? அளந்தறிவது? எவருடைய கண்களும்- காளத்தியண்ணல் கண்களும்கூட, திண்ணனாரின் அன்பை அளந்து காணும் ஆற்றலுடையன அல்ல. எனவே, திண்ணனாரின் அன்பின் பெருக்கத்தைத் திண்ணனார் கண்களைக் கொண்டேதான் பார்க்க வேண்டும்; பார்த்து அனுபவிக்க வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில்தான் காளத்தியப்பருக்குக் கண்ணில் உதிரப் பெருக்கு ஏற்பட்டது: பொருட்பற்றிப் பூசனை செய்த சிவகோசரியார் செயலற்றவராகிறார். திண்ணனார் விரைந்து செயற்படுகிறார்; தமது கண்ணை இடந்து அப்புகிறார். திண்ணனார் கண்ணப்பராகிறார்! அன்பு கண்ணப்பராகிறது: கண்ணப்பர் அன்பின் பிழம்பாய்த் தெரிகின்றார். கண்ணப்பரை ஆட்கொண்டருளிய இறைவன் தன்னையும் ஆட்கொண்டருளியதை

வியந்து பாடுகின்றார், மாணிக்கவாசகர்.