பக்கம்:திருவாசகத்தேன்.pdf/154

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன் ☐ 145

மாக வாழ்தல் வேறு. கூட்டமாக கூடுதல் கூடப் பயம், தேவை ஆகிய அடிப்படையிலேயே நிகழ்கிறது. ஒன்றாகக் கூடி வாழ்தல் வேண்டும். ஒன்றாகக்கூடி உழைத்தல் வேண்டும். இங்ஙனம் உணர்வால் ஒத்ததறிந்து வாழும் மக்கள் தொகுதியே சமூக அமைப்பு. உயர்ந்த சமூக அமைப்பில் தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மேட்டுக்குடியினர் என்ற பாகுபாடு தோன்றாது; தோன்ற வழியில்லை. 'ஒருவர் எல்லாருக்காகவும் எல்லோரும் ஒருவருக்காகவும்' என்று வாழ்வர். இயற்கை அமைவின், காரணமாகத் தகுதி, திறமையில் வேறுபாடுகள் இருந்தாலும் அல்லது காணப்பெற்றாலும் அவற்றை பொருட்படுத்துவதில்லை. பெரியோரை வியத்தல் தமிழ் மர்பன்று. அதுமட்டுமல்ல. சிறியோரை இகழ்தல்; அதனினும் இல்லை. தகுதி, திறமைகள் அழுக்காற்றைத் தூண்டி வளர்த்தல் உயர்ந்த சமுதாய அமைப்பில் காண இயலாது. 'கடையனுக்கும் கடைத்தேற்றம்' எங்கு உள்ளதோ அங்கேதான் சமூகம் இருக்கிறது.

சமுதாயம் என்ற அமைப்பு, மனிதகுல வரலாற்றின் தொடக்க காலத்தில் இருந்தது. ஒருவரை ஒருவர் சார்ந்தே வாழ்ந்தனர். அன்று மனித குலத்தை அரித்து அழிக்கும் அழுக்காறு, அவா, வெகுளி ஆகிய தீமைகள் இல்லை. தனி உடைமைக் கோட்பாடும் வாழ்க்கை முறையும் தோன்றிய பிறகே சமுதாயம் உருக்குலைய ஆரம்பித்தது. பண்டங்களைப் பணமாக்கிப் புழங்கும் சமுதாயம் தோன்றிய பிறகே 'மனிதம்' மறைந்தது. பண மதிப்பீட்டுக் கொள்கை கோலோச்சத் தொடங்கியது என்றோ, அன்றே சமூகம் என்ற அமைப்பு நொறுங்கி உருத்தெரியாமல் போய்விட்டது. களவும் காவலும் தோன்றின. இரப்போரும் ஈவோரும் தோன்றினர். ஆட்சிக்கு அதிகாரங்கள் பெருகி வளர்ந்தன் சிறைச் சாலைகள் வளர்ந்தன. மக்கள் அடிமைகளானார்கள்.

தி-10