பக்கம்:திருவாசகத்தேன்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்

என்ற பெயரில் கலகம் செய்கிறது. அழுக்காற்றின் வழிப்பட்டு அல்லற்படுகிறது; அல்லற்படுத்துகிறது. ஆதலால், சமூகம் என்ற அமைப்பு வலிமையான அடைப்பாக உருக்கொள்ளவில்லை.

மனிதன் ஒரு சமூகப் பிராணி. ஆனாலும் அவனால் சமூகத்தில் ஓர் உறுப்பினனாக வாழ முடியவில்லை; வாழ இயலவில்லை. ஆதலால், சமூகத்தின் அங்கீகாரத்தை மனிதன் பெற முயற்சி செய்வதில் அர்த்தமில்லை; பொருளுமில்லை. சமூகம் “நல்லது”, “உண்மை” என்ற அடிப்படையில் மதிப்பீடு செய்யாது. தகுதி, திறமைகளுக்கும் கூட சமூகம் மதிப்புக் கொடுப்பதில்லை. ஆதலால், நாம் வளர வேண்டுமானால் இரண்டு நிகழ்வு கள் கட்டாயமாக நிகழ்ந்தாக வேண்டும். அதாவது,

“பேசப்பட்டேன் கின்னடியாரில்” பூதலரால்
“நின் அடியான் என்று ஏசப்பட்டேன்”

என்ற மாணிக்கவாசகரின் அனுபவம் நமக்கும் பொருந்தும்; வேண்டும். . -

நல்லவர்கள் கூடியிருக்கிற அவையில் நாம் ஒரு பொருளாக மதிக்கப் பெற்றுப் பேசப்படுதல் வேண்டும். கெட்டவர்கள் கூடியுள்ள கூட்டத்தில் நாம் ஏசப்படுதல் வேண்டும். இவை இரண்டும் நிகழ்ந்தால் நாம் நல்லவர்களாக வாழ்கிறோம் என்பது பொருள்.

மாணிக்கவாசகருக்கு தம்மை இந்த உலகம் ‘பேய்’ என்று கூறிப் பரிகாசத்துடன் சிரிக்கவேண்டுமாம். ஆம்: இன்று இந்த உலகம் பேயாகத்தான் திரிகிறது. பணப் பேய் பிடித்தாட்டுகிறது. தலைவராதல் வேண்டும் என்ற பேய்க்குணம் பிடித்தாட்டுகிறது. நல்லதைக் கேட்பதும் இல்லை; சிந்திப்பதும் இல்லை. ஆதலால், இந்த உலகம் என்னை அங்கீகரிப்பது என்பது ஒருபோதும் ஆகாது.