பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் * 101


தோன்ற அதன்படியே அரசனிடம் வந்து ஆவணி மூலத்தில் குதிரைகள் வரும்’ என்று கூறிவிட்டார். ஆனால், ஆவணி மூலத்தில் குதிரைகள் வரவில்லை. பின்னர் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் பலரும் அறிந்தவையே ஆகும்.

தம்முடைய மனத்தில் தோன்றிய குறிப்பு இறைவன் திருவுளப்படி வந்தது என்று அடிகளார் தவறாகக் கருதிவிட்டார். எனவே, ஆவணி மூலத்தில் குதிரை வரும் என்று கூறினார். தம்முடைய மனக்குறிப்பை இறைவன் மேல் ஏற்றிக்கூறியது சரியன்று என்பதைப் பின்னர் உணர்கின்றார். அதனாலேயே தம்மைப் பொய்யன் பொய்யன் என்று பல இடங்களிலும் குறிப்பிடுகின்றார். இதுவே சரவண முதலியார் அவர்களின் கருத்து.

இக்கருத்தை ஏற்றுக்கொள்வதாயின் பேர்ந்தும் என் பொய்ம்மை ஆட்கொண்டு அருளிடும் பெருமை போற்றி’ என்று பாடியதற்கு நேரான பொருள் கிடைத்து விடும்.

இக்கருத்து வலுவுடையது என்பதற்கு அடிகளாரின் ‘விச்சுக்கேடு பொய்க்கு ஆகாதென்று இங்கு எனை வைத்தாய்'(திருவாசகம் 85) என்ற தொடர் பெரிதும் அரண் செய்வதாக உள்ளது.


74.

போற்றி இப்புவனம் நீர் தீக்

காலொடு வானம் ஆனாய்

போற்றி எவ்வுயிர்க்கும் தோற்றம்

ஆகி நீ தோற்றம் இல்லாய்

போற்றி எல்லா உயிர்க்கும்

ஈறு ஆய் ஈறு இன்மை ஆனாய்

போற்றி ஐம் புலன்கள் நின்னைப்
புணர்கிலாப் புணர்க்கையானே

70


புலன்கள் புணர்கிலாப் புணர்க்கையான்-மாயையின் காரியமாகிய விஷயங்கள் சென்று பற்றாத சேர்க்கையுடையவன்.