பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


தாம் செய்த பிழைக்கு உண்மையாக மனம் வருந்தாமல், அதனால் வரும் பாவம் தனக்கோ தன் குடும்பத்திற்கோ தீங்கு தரும் என்ற அச்சத்தால், அந்தப்பாவத்தைப் போக்கிக்கொள்ளச், செய்யப்படுவதே பிராயச்சித்தமாகும். மனுநீதி கண்ட புராணத்தில் அரசகுமாரன் பசுக்கன்றைக் கொன்ற பாவத்தைப் போக்கப் பிராயச்சித்தம் செய்தால் போதுமானது என்று அமைச்சர்கள் கூறுகிறார்கள். ஆகவே, இந்தத் தரும சாத்திரக் கருத்தும் தமிழகத்தில் வழங்கிவந்தது என்பதையும் அறிய முடிகிறது.

பிழைக்கு உண்மையாக வருந்தினால் மன்னித்து அருள்பாலிக்கக் கூடியவன் இறைவன் ஒருவனே என்ற கருத்தை வலியுறுத்திப் பேசியவர் மணிவாசகரே ஆவார்.

ஆனந்தாதீதம்

95.


மாறு இலாத மாக் கருணை வெள்ளமே
வந்து முந்தி நின் மலர்கொள் தாள் இணை
வேறு இலாப் பதப் பரிசு பெற்ற நின்
மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார்
ஈறு இலாத நீ எளியை ஆகி வந்து
ஒளி செய் மானுடம் ஆக நோக்கியும்
கீறு இலாத நெஞ்சு உடைய நாயினேன்
கடையன் ஆயினேன் பட்ட கீழ்மையே

91
கீறிலாத-பதியாத.

பாடலின் முதலிரண்டு அடிகளில் உண்மை அடியவர் பெருமை கூறப்பெற்றுள்ளது. இதைக் கூறுவதன் காரணம் இதன் எதிராக எவ்விதச் சிறப்பும் இல்லாத தமக்கு எளியனாக மானிட வடிவம் தாங்கி அருள் செய்த குருவின் பெருமையைக் கூறுவதேயாகும்.