பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


செய்கிறார். ஆதலின், இப்பகுதி நீத்தல் விண்ணப்பம் என்ற பெயரைப் பெற்றது.

105.

கடையவனேனைக் கருணையினால்
      கலந்து ஆண்டுகொண்ட
விடையவனே விட்டிடுதி கண்டாய்
     விறல் வேங்கையின் தோல்
உடையவனே மன்னும் உத்தரகோச
     மங்கைக்கு அரசே
சடையவனே தளர்ந்தேன் எம்பிரான்
      என்னைத் தாங்கிக்கொள்ளே 1

கலந்து-உயிரோடு உள் கலந்து. விடையவன்- இடபவாகனம் உடையவன். விறல் வேங்கை-வலியபுலி. தளர்ந்தேன் அடியேனை மலவாதனைதாக்கத் தளர்ந்தேன்.

இப்பாடலின் முதலிரண்டு அடிகள் ஆழமான பொருளுடையவை. பாடலின் இரண்டாவது அடி ‘விட்டிடுதி கண்டாய்” என்று விண்ணப்பம் செய்கிறது. ‘என்னை விட்டுவிடாதே’ என்று இரண்டு வகையில் வேண்டலாம்.

தலைவன் யாரென்று தெரியாமலும் அவன் தமக்கு இது செய்வதற்குத், தம்பால் என்ன தகுதியுள்ளது என்று தெரியாமலும் விண்ணப்பம் செய்வது ஒருவகை. இந்த முதல்வகை விண்ணப்பத்தின் அடிப்படை, தம் துயரத்தைப் போக்கிக்கொள்ள வேண்டுமென்ற ஆசையில் தோன்றியதாகும்.

இவ்வாறன்றி 'இன்ன இன்ன காரணங்களால் நீ என்னை ஏற்றுக்கொண்டே தீரவேண்டும். நடுவில் என்னை விடுவதற்கு உனக்கு உரிமையில்லை’ என்பதைக் குறிப்பிட்டு விண்ணப்பிப்பது, இரண்டாவது வகையாகும்.