பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


‘என் வினை காரணமாக அது நீடிக்கவில்லை. அந்த நிலை மாறியவுடன் புலன்கள் பொங்கி எழுந்து என்னைக் கெளவிக்கொண்டமையின் போகும் வழியறியாமல் செந்நெறியிலிருந்து விலகிவிட்டேன். ஐயனே! என்னைக் கைவிட்டு விடாதே. -

‘விண்ணும் மண்ணும் அஞ்சிய ஆலகாலத்தை ஏற்றுக்கொண்டவனே! பொறி புலன்கள் இவ்வளவு துன்பத்தைச் செய்தும், செந்நெறியிலிருந்து என்னை விலகுமாறு செய்தும்கூட, அன்று திருப்பெருந்துறையில் நீ வழங்கிய அருளார் அமுதம் என் உள்ளத்தில் எங்கோ ஒரு மூலையில் மறைந்து நிற்பதால், இப்பொழுதும் நடுங்குகின்றேன்’ என்றவாறு,

133.

குலம் களைந்தாய் களைந்தாய் என்னைக்
குற்றம் கொற்றச் சிலை ஆம்
விலங்கல் எந்தாய் விட்டிடுதி கண்டாய்
பொன்னின் மின்னு கொன்றை
அலங்கல் அம்தாமரை மேனி அப்பா
ஒப்பு இலாதவனே
மலங்கள் ஐந்தால் சுழல்வன் தயிரில்
பொரு மத்து உறவே 29


குலம்-குடிப்பிறப்பு கூட்டம் என்பாரும் உளர். குற்றம்-அறியாமையால் யான் இயற்றும் குற்றங்கள். சிலை-வில். விலங்கல்-மலை. அலங்கள்-மாலை.

‘மானிடக் குலத்திற்கு இயல்பாக உள்ள குற்றங்கள் என்பாலும் இருந்துவந்தன. இக்குற்றங்கள் தோன்றுவதற்குரிய என் தலைமீது உன் திருவடி பட்டமையின், என் பிறப்பால் வரும் குற்றங்கள் அனைத்தையும் போக்கினாய். என்னை விட்டுவிடாதே’ என்கிறார்.