பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீத்தல் விண்ணப்பம் * 183


மதிகளுக்கும் பின்னே நின்று அவர்களைத் தாங்குபவனே! அனைத்துமாகி இருப்பவனே! என்னைக் கை விட்டுவிடாதே’ என்கிறார்.

148.

முழுது அயில் வேல் கண்ணியர் என்னும்
      மூரித் தழல் முழுகும்
விழுது அனையேனை விடுதி கண்டாய்
      நின் வெறி மலர்த் தாள்
தொழுது செல் வானத் தொழும்பரில் கூட்டிடு
      சோத்தெம் பிரான்
பழுது செய்வேனை விடேல் உடையாய்
      உன்னைப் பாடுவனே 44

விழுது-நெய். சோத்து-வணக்கம். தோத்திரம் சோத்திரமாகி, சோத்தமாகி, அம்கெட்டு, சோத்து என நின்றது.

‘வேல்போன்ற கண்ணினை உடைய மகளிர்மேல் கொண்ட ஆசையென்னும் நெருப்பு என்னை முழுவதுமாக அமிழ்த்திவிட அந்நெருப்பில் வெண்ணெய்போன்று உருகுகின்றேன். என்னை விட்டுவிடாதே'.

‘அடியேன் உன்னைப் பாடுகின்ற காரணத்தால், பல குற்றங்களைச் செய்பவன் ஆயினும், விட்டுவிடாதே’ என்கிறார்.

இப்பாடலில் மூன்றாவது அடியில் வரும் 'சோத்தெம் பிரான்’ என்ற சொற்கள் ஒரு குறிப்பிட்ட பொருளை உடையன. ஈ, தா, கொடு என்ற சொற்கள் கொள்வோர் கொடுப்போர் வேற்றுமையை உணர்த்துகின்றன. அதுபோல, வணக்கம் என்ற பொருளையுடைய 'சோத்து’ என்ற சொல் இழிந்தோர், தம் தலைவனுக்குச் செய்யும் வணக்கத்தைக் குறிப்பதாகும்.