பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


தோன்றி, வளர்ந்து, மறையும் உயிர் பல்வேறு உடல்களை எடுக்கிறது, அவ்வாறு எடுத்தாலும் உயிர் ஒன்றாகவே உள்ளது. என்றாலும் புல்லாய்ப் பூடாய் என்று கூறுவதுபோல உடம்பு மாற்றம் காரணமாக அந்த உயிர், வளர்ச்சியை அடைகிறது என்பது தெளிவு. எனவே, அந்தந்த உடலிலும் அந்தப் பழைய உயிர் புதிய வளர்ச்சியைப் பெறுதலின் புதுமையாகவே உள்ளது. உயிர் பெற்ற இவ் வளர்ச்சியையே ‘புதுமை’ என்று கூறுகின்றோம். அந்த உயிருக்கு உயிராய் அதனுள் இருக்கும் இறைவன் இந்தப் புதிய வளர்ச்சியில் தானும் இடம் பெறுகிறான் ஆதலின், புதுமைக்கும் புதுமையனாகவே இருக்கிறான்.

தருக்க முறையில் இவ்வாறு சிந்தித்தால் 'முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே’ என்று அடிகளார் பாடியது எவ்வளவு பொருத்தமானது என்பது விளங்கும்.

அடுத்து உள்ள ‘உன்னைப் பிரானாக...... பணி செய்வோம்’ என்ற பகுதி பொதுவாக அனைவருக்கும், சிறப்பாக அடியார்களுக்கும் மிகவும் தேவையான பகுதியாகும்.

‘எண்ணித் துணிக கருமம்' (திருக்குறள்: 46) என்றும் இதனை இதனால் இவன் முடிக்குமென்று ஆய்ந்து அதனை அவன்கண் விடல் (திருக்குறள்:517) என்றும் அனுபவ ரீதியான ஒரு முடிவைக் குறள் பேசியுள்ளது. இந்தக் கன்னிப் பெண்களைப் பொறுத்தமட்டில் தாங்கள் யார் என்பதை நன்கு யோசித்து, ஒரு முடிவுக்கு வந்து, ‘உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீரடியோம்' என்று கூறியுள்ளார்கள். தாங்கள் யார் என்பதை ஐயம் திரிபுக்கு இடமின்றித் தெளிந்த சிந்தனையுடன் முடிவாக உன் ‘சீரடியோம்’ என்று கூறிவிட்டனர்.