பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

242 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


எனவே, சோதி திறம் என்று இங்கு அடிகளார் குறிப்பிடுவது அக மனத்தின் ஆழத்தில் தோன்றும் ஒளிவடிவான இறைவனையே ஆகும்.

மிக நுண்மையானதாகிய பர வெளியில் தொடங்கி ஒரளவு கட்புலன்களுக்குத் தட்டுப்படும் சோதிவரையில் கூறியபிறகு சாதாரண மக்களின் நினைவு அடிகளாரின் உள்ளத்தில் தோன்றுகிறது. 'சூழ் கொன்றைத் தார்பாடி’ என்றதால் கட்புலனுக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய கொன்றை மாலையை நுண்மையில் ஈடுபட முடியாதவர்களுக்கு கூறினார் ஆயிற்று.

கொன்றை மாலையைக் கூறியவுடன் அதனை அணிந்திருப்பவனுடைய நினைவு மனத்தில் தோன்றும், அந்நினைவும் மானிட வடிவு தாங்கிய இறைவனைப் பற்றியதாகவே இருக்கும். மானிட வடிவு பற்றிய அந்த நினைவு தொடராமல் இருக்க ‘ஆதி திறம் பாடி’ என்றார். அந்தமாக உள்ளதும் அதுவே என்பதை 'அந்தம் ஆமா பாடி' என்றார்.

இவ்வாறு கூற ஒரு காரணம் உண்டு. மானிட வடிவு கற்பித்தவுடன், மனித மனம் இறைவன் திருமேனிக்கு அடி முடி கற்பித்துக்கொண்டு அந்த எல்லைக்குள் அவனை நிறுத்திவிட முயலும், அத்தவறு நிகழாதிருக்கவே அனைத்திற்கும் ஆதியாக உள்ளவனும் அந்தமாக உள்ளவனும் அவனே என்ற கருத்தை மனத்தில் பதிக்க வேண்டிச் 'சூழ்கொன்றைத் தார்பாடி' என்றதன் பின் இதனை வைத்தார்.

சூழ்கொன்றை என்று கூறியவுடன் எளிமையாக மனத்தில் அவன் வடிவைப் பதித்துக்கொண்ட நாம், ஆதி, அந்தம் என்றவுடன் கலங்கிவிடுகிறோம். ஆதி, அந்தம் அற்ற இப்பொருள் நம் மன எல்லைக்குள் வந்து நமக்குப் பயன்படாதோ என்ற கலக்கம் வருதல் இயல்புதானே?