பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை * 259


மற்றொன்றும் காணற்க’ என்று பன்னிப் பன்னி இவர்கள் பேசுவதன் நோக்கமென்ன? யாருடன் இவர்கள் பேசுகிறார்கள்! இறைவனிடம் அல்லவா? முற்றறிவினன் ஆகிய அவனிடம் வரம் வேண்டும் இவர்கள், கொங்கை, கை, கண் என்று தனித்தனியாகப் பிரித்துப் பேசுவதன் காரணமென்ன ?

இவ்வினாவிற்கு விடை ஒன்றே ஒன்றுதான். காரைக்கால் அம்மையார், அவர்கள் கண்முன் நிற்கின்றார். இறுதியில் இறைவனால் ‘அம்மையே' என்று அழைக்கப் பெறும் பேற்றைப் பெற்றார் ஆயினும், மானுட உடம்புடன் இருக்கும்போது இறையன்பு இல்லாத ஒருவன் தோளில் அவர் கொங்கை சேர்ந்தது; அவனுக்கே அவர் கைகள் பணிபுரிந்தன; தனித்திருக்கும் பொழுதெல்லாம் அவனையே அம்மையாரின் கண்கள் கண்டன.

இத்தனை இருந்தும் இவற்றை வெற்றிகொள்ளும் ஆற்றல் அம்மையார்பால் இருந்தது. அத்தகைய ஆற்றல் எம்மிடம் இல்லை என்ற அச்சத்தால், பழைய பழமொழியை இப்போது புதுக்கிக்கொண்டு, உன்னிடம் ஒரு விண்ணப்பம் செய்கின்றோம் என்ற கருத்தில்தான் ‘எம் அச்சத்தால் எங்கள் பெருமான் உனக்கு ஒன்று உரைப்போம் கேட்பாயாக’ என்ற பெரிய முன்னுரையுடன், தம் அச்சத்தை வெளியிடுகின்றனர். காரைக்கால் அம்மையார் நினைவு அவர்கள் மனத்தில் ஊசலாடியதால் தான் 'சேரற்க, செய்யற்க, காணற்க’ என்று எதிர்மறை முகத்தால் பேசுகின்றனர். இறைவனிடம் எதிர்மறை முகத்தால் பேசுவது சரியன்று என்றாலும், அவர்கள் அச்சம் காரணமாகப் பேசினர் என்க.