பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

262 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


உய்கதி அடையும்படி வந்து ஆட்கொள்ளுகின்றன என்பதால் ‘அருளல்’ தொழிலைக் கூறினாராயிற்று.

‘ஆதியாம் பாதமலர்’ என்று தொடங்கியவர் ஐந்தொழிலையும் வரிசைப்படுத்திக் கூறிவிட்டு, இதற்கு அப்பால் வேறு ஒன்றும் இல்லையாதலால், அந்தமாம் செந்தளிர்கள் என்றார். அந்தம் என்று கூறியவுடன் நம் அறிவு கொண்டு காணும் எல்லையை மனத்துட் கொண்டு இதுதான் முடிவு இதற்கு அப்பால் ஒன்றுமில்லை என்று நினைந்துவிடுவோமோ என்று கருதிய அடிகளார், அந்தம் என்பது ஐந்தொழிலின் அந்தம் என்றுமட்டுமே கொள்ள வேண்டும் என்ற கருத்தைக் குறிப்பிடுகிறார். அத்திருவடிகட்கு அந்தம் என்று ஒன்று இல்லை; வாக்கு, மனோலயம் கடந்து நிற்கும் ஒன்றிற்கு அந்தம் கூறுவது எப்படி? எனவே, அந்தம் என்று இங்கு குறிப்பிட்டது ஐந்தொழிலின் அந்தமேயன்றித் திருவடிக்கு அந்தமொன்றில்லை என்பதைக் குறிக்க 'அந்தமாம் செந்தளிர்' என்றார். செந்தளிர் என்ற சொல் வளர்ச்சியைக் குறிக்கும் சொல்லாகும். முடிவு என்ற ஒன்று இல்லை. வளர்ந்து கொண்டேயுள்ளது என்பதை அறிவிக்க 'அந்தமாம் செந்தளிர்’ என்று கூறினார்.

சிவபுராணத்தில் தொடங்கிய திருவடிபற்றிய விளக்கம் நான்கு அகவல்களிலும் நீண்டு, திருச்சதகத்திலும் நுழைந்து, நீத்தல் விண்ணப்பத்தில் விரிந்து, திருவெம்பாவைக் கடைசிப் பாடலில் முழுவதுமாக மலர்ந்து நிற்கின்றது.

உலகில் தோன்றிய பல்வேறு சமயங்களும் தாம் தாம் கருதிய கடவுட் பொருளுக்கும் பல்வேறு வகையாகப் பெருமை சேர்த்தன. ஆனால், ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றுமில்லாத ஒருவனுக்கு, வடிவு கற்பித்து, அதிலும்