பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திரு அம்மானை * 299


ஆண்டவன் பணி என்ன என்பதை விரிவாகவே கூறியுள்ளார்.

ஆறறிவுடைய மனிதராகப் பிறந்தவர்கள் வாழ்வின் குறிக்கோள் யாது என்பதை ஆழ்ந்து சிந்தித்தால், தாள் அடைதலே அக்குறிக்கோள் என்பது நன்கு தெரியவரும். இது மனிதர்கள் கடமையாகும். இது நன்கு நிறைவேறினால் நெஞ்சு உருகும் நிலை ஏற்படக் காணலாம். நெஞ்சு தானாக உருகும் இயல்புடையது அன்று; அதனை உருக்குவிக்கும் தன்மை நம்பாலில்லை. எனவே, நெஞ்சு உருகிற்று என்றால் அதனை உருக்கினான் ஒருவன் உண்டு என்பது நன்கு தெளியப்பெறும். ஒரு பணியைச் செய்தவருக்கு அப்பணியைப் பெற்றுக்கொண்டவர்கள் தவறாமல் கூலி கொடுத்தல்போல் தாள் அடைதலாகிய பணியைச் செய்தவர்க்கு, தவறாமல் அவர்கள் நெஞ்சை உருக்கும் பயனைத் தருகிறான் இறைவன்.

நெஞ்சு உருகிற்று என்றால், ஆன்மாவிற்கு அவன் அருள் கிடைத்துவிட்டது என்பது உறுதி.

‘அப்பாண்டி நாட்டைச் சிவலோகம் ஆக்குவித்த அப்பார் சடையப்பன்’ என்ற தொடர் திருவிளையாடல் புராணத்தில் வரும் வரகுணனுக்குச் சிவலோகம் காட்டிய கதையைக் குறிப்பதாகவும் இருக்கலாம். இன்றேல் மானுட வடிவு தாங்கிய ஆலவாய்ச் சொக்கன், வலை வீசியது முதலாக, மண்சுமந்ததுவரையான பல திருவிளையாடல்களையும் செய்வதற்கு இடமாகத் தேர்ந்தெடுத்தது பாண்டி நாடே ஆதலின் அதனைக் குறித்ததாகவும் இருக்கலாம்.

‘வார்கழலே ஒப்பாக ஒப்புவித்த உள்ளத்தார்’ உள்ளிருக்கும் இறைவன் என்பது, யாருடைய உள்ளத்தில் இறைவன் தங்குகிறான் என்பதை விளக்கமாகக் கூறியது. தம்முடைய உள்ளத்தை வார்கழலுக்கு முழுவதுமாக ஒப்புவித்த அடியார்கள் யாரோ அவர்களுடைய