பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பின்னுரை


திருவாசகத்தின் தொடக்கத்தில் உள்ள நான்கு அகவல்களும் பழைய மரபுபற்றி வரும் அகவல் பாக்களேயாகும். இதிலும்கூட ஒரு புதுமையைக் காணமுடிகிறது. அகவற்பாக்கள் எட்டாம் நூற்றாண்டில் ஏறத்தாழ வழக்கொழிந்துவிட்டன என்றே கூறல் வேண்டும். அதிலும், பக்தி இயக்கத்தில் பெருவீறுடன் தோன்றிய பாடல்கள் இசைப் பாக்களாகவோ விருத்தப் பாக்களாகவோ இருந்தன. ஆறாம் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டின் தொடக்கம்வரை உள்ள காலப்பகுதியில் மூவர் முதலிகள் தேவாரங்கள்தவிர ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தங்களும் தோன்றின. இவை அனைத்துமே இசைப் பா, விருத்தப் பாக்களால் ஆகியவை என்பதை நினைவிற் கொள்வது நலம். கட்டளைக் கலித்துறை போன்ற விருத்தப் பாக்கள் காரைக்கால் அம்மையார் காலத்திலேயே தோன்றிவிட்டன. ஆனால், இதே விருத்தப்பாக்கள் நான்கு முதல்...எட்டுவரை உள்ள சீர்களைக் கொண்டே அமைந்தன. ஆனால், இசைப்பாக்களாக வடிவெடுக்கும் பொழுது முதலடியில் ஐந்து சீர், இரண்டாம் அடியில் நான்கு சீர் என்ற முறையில் பல்வேறு விகற்பங்களுடன் தோன்றலாயின. இவற்றிற்கு ஒரே காரணம் இந்த இசைப்பாக்கள் தாளத்தோடு பாடப்பெற்றதால் அந்தத் தாளக்கட்டுக்கேற்ப முதலடி இரண்டாம் அடிகளில் சீர்களின் எண்ணிக்கை மாறி வரலாயின. இந்த விகற்பங்களைத் திருஞானசம்பந்தர், நம்மாழ்வார் போன்ற பெருமக்கள் பாடிய பாடல்களில் நன்கு காணலாம்.

மணிவாசக அடிகளார் காலத்தில் இசைப்பாக்களும் செல்வாக்கை இழந்துவிட்டன. முன்னரே செல்வாக்கை இழந்த ஆசிரியப்பாக்களுக்குப் புத்துயிர் கொடுத்து நான்கு