பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

332 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


உலகிடை மனிதர்களாகப் பிறந்து வாழ்கின்றவர்களுள் அடிகளாரைப் போன்றவர்கள் இறையனுபவத்தைப் பெற்றுத் தம்மை மறந்த நிலையில் இருக்கின்றார்கள். என்றாலும், மனித உடலில் அவர்கள் வாழ்கின்றார்கள். ஆதலின், அந்த இறையனுபவம்கூட இருபத்து நான்கு மணி நேரமும் ஒருபடித்தாக நிலைத்து இருப்பதில்லை. சித்தத்தில் தோன்றும் உணர்வுகூட அலைகளைப் போன்று மேல் எழுந்தும் இறங்கியும், ஏற்ற இறக்கங்களோடு இருத்தல் இயல்பே ஆகும். அப்படியானால், சாதாரண மனிதர்களின் மனத்தில் உணர்ச்சிகள் ஏற்ற இறக்கங்களோடு இருப்பது போல்தான் இவர்களுக்கும் இருக்கின்றதா? சாதாரண மனிதர்களின் உணர்ச்சிகள் விநாடிக் கணக்கில் மாறுகின்றன; இப்பெருமக்களின் உணர்வுகள் மணிக் கணக்கில் நிலைபெறுகின்றன. என்றாலும், ஒரோவழி அந்த உணர்வுகள் இறங்கிவிட அவர்களும் நம்மைப்போல ஆகிவிடுகிறார்கள்.

இப்படி இறங்கிவிட்ட நிலையில் உணர்வில் மூழ்கியிருந்த பழைய நிலையை நினைந்து பார்க்கிறார்கள். இப்பொழுது தாம் யார், தம்மைச் சுற்றி உள்ளவர்கள் யார், அவர்கள் தம்மைப்பற்றி என்ன பேசுகிறார்கள் என்பவை மனத்திரையில் நிழலாடுகின்றன. இவர்களுடைய பழைய அனுபவ நிலையின் இயல்பை அறியாத, சுற்றி நின்றவர்கள் இவர்களைப் பைத்தியம் என்று கூறினார்கள். பைத்தியம் என்று இப்பொழுதுதான் சொல்கிறார்களா? அனுபவத்தில் மூழ்கியிருந்த காலத்திலும் கூறினார்கள்; அதனிலிருந்து வெளிப்பட்ட காலத்திலும் கூறினார்கள். அனுபவத்தில் மூழ்கியிருந்தபோது அயலாரின் ஏச்சு இவர்கள் காதில் ஏறவில்லை.

இப்பொழுது உள்ள சாதாரண நிலையில், சராசரி மனிதர்களாக இருப்பின், பிறர் எள்ளி நகையாடும் பழைய நிலைக்குப் போக வேண்டாம் என்று நினைப்பர்.