பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பின்னுரை * 333


அடிகளார் போன்றவர்கள் இதற்கு நேர் மாறாகத் 'தத்தம் மனத்தன பேச எஞ்ஞான்றுகொல் சாவதுவே'(திருவாச : 7) என்று புலம்புகிறார்கள்.

சாவது என்ற சொல் இங்கே மரணத்தைக் குறிக்கவில்லை; பிறர் அவமதித்துக் கூறும் சொற்கள் காதில் விழாத நிலை, விழுந்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படாத நிலை என்ற இரண்டு நிலைகளையுமே குறிக்கின்றது. எனவே, ‘சாவது' என்ற சொல் அகங்கார மமகாரங்களை அறவே ஒழித்து நிற்கும் நிலையைக் குறிப்பதாகும்.

'மெய்தான் அரும்பி' என்ற 5-ஆம் பாடல் மெய்யுணர்வு அனுபவத்தில் முழுவதும் மூழ்கிவிட்ட நிலையைக் குறிக்கும். அந்த அனுபவத்திலிருந்து மீண்ட நிலையில் பொறி, புலன்கள் விழிப்படைய, நான் ஓரளவு தலையெடுக்கிறது. அப்போது சுற்றி நின்றவர்கள் பேச்சு காதில் விழுகின்றது. இவையெல்லாம் காதில் விழாத நிலைக்கு எப்போது போகப் போகிறோம் என்ற ஆதங்கத்தில் வெளிப்பட்டதாகும் ஏழாவது பாடல்.

தாம் நினைத்தவுடன் பழைய நிலைக்கு போகும் வழியில்லை. இந்த நிலையில் அந்த இறையனுபவம் எதனால் வந்தது, எவ்வாறு வந்தது- முதலிய வினாக்களை எழுப்பி ஆழ்ந்து சிந்திக்கிறார் அடிகளார். இச்சிந்தனையின் பின்னர் ஓர் உண்மை அவருக்குப் புலனாகின்றது. தம்பால் உள்ள எந்தத் தகுதியினாலோ எந்தப் பண்பாட்டினாலோ அந்த நிலையை அடையவில்லை என்பதை அறிகின்றார்.

திருப்பெருந்துறையில் குருதரிசனம் கிடைத்தபோது நூற்றுக்கணக்கான அடியார்கள் சுற்றி அமர்ந்திருந்தார்கள். எப்பொழுதும் இறையனுபவ நிலையில் இருப்பவர்கள் அவர்கள். எப்பொழுதும் அனுபவத்தில் மூழ்கியிருக்கின்றவர்களிடையே சில நேரம் மட்டுமே அவ்வனுபவத்தின்