பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

382 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


அகன்று, தம்முள் ஒரு தோழனாகவும் தம்மிடையே உள்ள ஒரு தொண்டனாகவும் உள்ளான் என்பதை உணர்ந்த தோழிமாருக்கு ஒரு புதிய காட்சி தென்படலாயிற்று.

சமாதி நிலையிலிருந்து விடுபட்டுக் குருவாக அமைந்த தலைவியின் கூற்றுகள், அவர்களுடைய அஞ்ஞானத்தைப் போக்கவே, எதிரே உள்ள குளத்தின் காட்சி மாறிவிட்டது.

அந்த விநாடிவரை நாள்தோறும் அவர்கள் கண்டு மகிழ்ந்து, முகேரெனப் பாய்ந்து விளையாடிய குளம், அஞ்ஞானம் போனவுடன் புதிய காட்சியை நல்கிற்று. அந்தக் குளமே இறைவன் இறைவி வடிவாகக் காட்சி தரலாயிற்று. அதனை விளக்குவதே ‘பைங்குவளை...’ என்று தொடங்கும் பாடல்.

கயிலை யாத்திரை தொடங்குமுன் நாவரசர்பெருமானுக்கு நன்கு பழக்கப்பட்ட ஊராகும் திருஐயாறு. அங்கே உள்ள திருக்கோயில், அங்கு வழிபட வருவோர், தெருவில் நடமாடிய யானை முதலிய விலங்குகள் அவருக்கு நன்கு பழக்கப்பட்டவையே ஆகும். செல்லும் வழியில் கயிலைக் குளத்தில் மூழ்கி யாதும் சுவடு படாமல் ஐயாறடைந்த பெருமானுக்கு, அதே திருவையாறு முற்றிலும் புதிய காட்சியை நல்கியது. அதனையே நாவரசர் பெருமான் ‘கண்டு அறியாதன கண்டேன்’ (திருமுறை 4-3) என்று பாடியருளினார். எல்லா இடத்திலும் இறைவனைக் காணும் காட்சி நாவரசருக்குக் கயிலை மலையில் முனி புங்கவர் வேடத்திலிருந்த பெருமானால் அருளப்பெற்றது.

அதேபோன்று சமாதி நிலையிலிருந்து வெளிப்பட்ட நங்கையின் மூலம், நீராடச் சென்ற மகளிருக்கு முன்னர்க் கண்டறியாத காட்சி கிடைத்தது.

உறங்குகின்ற தலைவி என்று பலரும் உரைகண்ட திருவெம்பாவையின் முதற்பாடலுக்கு, அவள் சமாதி நிலையிலிருந்து எழுந்தாள் என்று புதிய சிந்தனை