பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பின்னுரை * 391


அம்மானையின் பத்தொன்பது பாடல்களில் திருவடிப் பெருமையும், அத்திருவடிகள் தமக்குச் செய்த பேருதவியும், அதனால் தம்மில் நிகழ்ந்த மாற்றமும்பற்றிப் பாடிய அடிகளார், நிறைவுப் பாடலில் தம் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியைப் பின்னோக்கிப் பார்க்கின்றார். மதுரை நாயகனாகிய சொக்கன் குதிரையின்மேல் வந்தானென்று கூறாமல், பெருந்துறையான் கொற்றக் குதிரையின்மேல் வந்தான் என்று பாடுவது சிந்திக்கத் தக்கது.

பெருந்துறையில் குரு அருள் செய்கின்றவரையில் அங்குத் திருக்கோயில் ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. இன்றும்கூடத் திருப்பெருந்துறைக் கோயிலின் கருவறையில் பீடம் இருக்கின்றதே தவிரச் சிவலிங்க வடிவம் இல்லை. குருவாக வந்தவர் அப்பீடத்திலிருந்து அருள்செய்த பிறகு அப்படியே மறைந்துவிட்டார் என்பதைக் குறிக்கவே, கருவறையில் சிவலிங்க வடிவம் இல்லாமல் கோயில் அமைக்கப்பெற்றுள்ளது. அடிகளாரே இக்கோயிலைக் கட்டினார் என்று வரும் கதைகளில் உண்மை இருக்குமா என்பது சிந்திக்கற்பாலது. புவனியில் சேவடி தீண்டியவன் சிவன் என அடிகளார் தேறிவிட்டமையின், அவர் இக் கோயிலை அமைத்திருப்பின் நிச்சயமாகச் சிவலிங்கத்தை நிறுவியிருப்பார். எனவே, அவர் காலத்துக்குப் பின்னர், அவருடைய மன்னனாகிய இரண்டாம் வரகுண பாண்டியன் போன்றவர்கள், நடைபெற்ற நிகழ்ச்சியை வைத்துக்கொண்டு இக்கோயிலைக் கட்டியிருக்க வேண்டும்.

அது எவ்வாறாயினும் 'பெருந்துறையான் கொற்றக் குதிரையின்மேல் வந்தருளிக் கோதாட்டினான்’ என்று அடிகளார் கூறுவதால், குருவடிவிலிருந்த பெருமானே இத்திருவிளையாடலைச் செய்தான் என்று அடிகள் நம்புகிறார். அப்படிப் பாடும்போது 'தன் அடியார் குற்றங் களைந்து குணங்கொண்டு கோதாட்டினான்’ என்று