பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42 * திருவாசகம் – சில சிந்தனைகள் – 2


அருள்பெற்ற நிலையில் உள்ள உருக்கமும் கண்ணீர்ப் பெருக்கமும் நிகழ்ந்ததென்னவோ உண்மை. இந்த அனுபவத்தைப் பெற்ற பிறகு, இந்தக் காட்சி, செயற்பாடு என்ற எதுவுமில்லாமல் அவன் பெயரைக் காதுகளால் கேட்ட அளவில், பதைத்து உருகுகின்ற நிலை வாராதா என்று அடிகளார் நினைத்திருத்தல் வேண்டும். காதால் கேட்ட அளவில், தமக்கு இந்த உருகும் அனுபவம் இல்லை யென்று ஏன் நினைக்கின்றார் அடிகளார்? 'உருகுவது (ஆகிய) உள்ளங்கொண்டோர் உருச்செய்தாங்கு எனக்கு அள்ளூறு ஆக்கை அமைத்தனன்' (திருவாச: 3-175) என்று பாடிய அடிகளார். இப்பொழுது அவர் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் உருகும் அனுபவம் தமக்கு இல்லையென்று கூறக் காரணம் என்ன? கேட்ட மாத்திரத்தில் உருகும் அனுபவம் கிடைத்திருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் என்று அடிகளாரே சிந்திக்கின்றார். அந்த அனுபவம் கிடைத்திருந்தால் உள்ளந்தாள் நின்று உச்சியளவும் நெஞ்சாய் உருகியிருக்கும்; உடம்பெல்லாம் கண்ணாய் வெள்ளம் பாய்ந்திருக்கும். அப்படி நடைபெறவில்லையே! ஆதலால், தம் நெஞ்சைக் கல் என்றும் தம் கண்களைக் காய்ந்த மரம் என்றும் கூறிக் கொள்கிறார். முதலிரண்டு அடிகள் இத்தகைய நிலை தமக்கு வரவேண்டும்; அதுவே தம் குறிக்கோள் என்ற கருத்தில் சொல்லப்பெற்றவை ஆகும்.

26.

வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று
      போது, நான் வினைக்கேடன் என்பாய் போல
இனையன் நான் என்று உன்னை அறிவித்து என்னை
      ஆட்கொண்டு எம்பிரான் ஆனாய்க்கு இரும்பின் பாவை
அனைய நான் பாடேன் நின்று ஆடேன் அந்தோ
      அலறிடேன் உலறிடேன் ஆவி சோரேன்
முனைவனே முறையோ நான் ஆன ஆறு
      முடிவு அறியேன் முதல் அந்தம்ஆயினானே 22