பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 கருதிப் பக்தி செலுத்துகின்றனர். இது மலர்களின் வடிவும் நிறமும் மாறுபடுவது போலாகும். மலர்களின் நிறமும் வடிவமும் மாறுபட்டாலும் மலர்களிடையே சிறப்புக் குறையாதவாறுபோல, வெவ்வேறு வகையில் இறைவனிடம் பக்தி செலுத்தும் இவர்களிடையே ஏற்றத் தாழ்வு இல்லை. இணை துணை மலர்கொண்டு திருவடியை ஏத்தித் தொழுவதற்காக வந்துள்ளோம் என்று தன்மைப் பன்மை யாகக் கூறியுள்ளதால், பல அடியார்களை உளப்படுத்திப் பேசுகிறார் அடிகளார். அவ்வாறு பேசுவதாலோ என்னவோ, மனித மனத்தின் இயல்பு முதல் இரண்டு அடி களில் வெளிப்படுகிறது. திருவடிகள் மலர் போன்றவை. அந்தத் திருவடிகளில் பக்தியோடு மலர்களை இடுவதுதான் நிறைவான வழிபாடாகும். மலர்களை இட்டுவிட்டு வேறொன்றை எதிர்பார்த்து நிற்பது மனித மனத்தின் இயல்பாகும். அதைக்கூட அடிகளார் இங்கே பேசுகிறார். பூங்கழற்கு இணைதுணை மலர் கொண்டேத்தி அதற்குப் பயனாக அவனுடைய எழில்நகை மலரை எதிர்பார்க்கின் றார்கள், இந்த அடியார்கள். திருவடியைத் தொழுவதற்கு முன்னர் எழில்நகை மலர்கொண்டு என்று கூறியதால் மனித மனத்தின் குறைபாட்டைச் சுட்டினார் ஆயிற்று. சேற்றிதழ்க் கமலங்கள் மலரும் தண் வயல் சூழ் திருப் பெருந்துறை என்று கூறியதிலும் ஒரு நயம் அமைந்துள்ளது. சேறு விரும்பத்தகாத பொருள் ஆயினும், அழகிய வடிவுடைய கமலம், அந்தச் சேற்றில் மலர்வதுபோல, இவ்வுடம்பு கீழானதாயினும் உடம்பு இருத்தலினால்தானே இறைவனிடத்துப் பக்தி செலுத்துவதும், மலர் கொண்டு அவன் திருவடிகளை அருச்சிக்கவும் முடிகின்றது! ஒரே சேற்றில் முளைத்த ஒரே தாமரை பல்வேறு இதழ்களைப் பெற்றிருப்பதுபோல, ஒரேவித மனித உடம்பைப் பெற்றிருக்கின்ற இந்த அடியார்கள் பல்வேறு நிலையில் பக்தி செலுத்துகின்றனர். -