பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 இருந்திருக்க முடியாது. எனவே, அடிகளாரைப் பொறுத்த மட்டில் அடியார் கூட்டம் அடிக்கடி காணும் அன்றாட நிகழ்ச்சி ஆகும். அந்த நிலையில் திருப்பெருந்துறையில் காணப்பெற்ற அடியார் கூட்டம் துரத்திலிருந்தே கண்டு கொண்டு வந்த அடிகளாருக்கு எவ்விதப் புதுமையையும் காட்டவில்லை. ஆனால், என்ன அதிசயம்! அவர்களிடையே சென்று அமருமாறு குருநாதர் ஆணையிட்டார். அந்த அடியார் கூட்டத்திடையே மணிவாசகர் என்ற புதுப்பிறவி எடுத்த திருவாதவூரர் அமர்ந்தார்; அமர்ந்த அந்த விநாடியே அடிகளார் ஒரு புதிய அநுபவத்தைப் பெற்றார். அவருடைய பொறி, புலன்களை எல்லாம் அடக்கி, மனத்தைத் தொழிற்படாமல் செய்து, சிந்தையில் தம் திருவடி வந்து தங்குமாறு செய்தது யார்? குருநாதர்தான் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. - இத்தகைய ஒர் அநுபவத்தை அடிகளார். இதுவரை பெற்றதில்லை. அவரைச் சுற்றிலும் அமர்ந்துள்ள அடியார் களின் சித்தத்திலிருந்து புறப்பட்ட நுண்மையான அதிர்வுகள் ஒரே விநாடியில் இதனைப் பெற உதவின. அடியார் நடுவுள் இருக்கும் ஆனந்தம் ஈடு இணையற்றது, வீடு பேற்றிற்குச் சமமானது என்பதை உணர்ந்துகொண்ட அடிகளார் தாம் இனி அவர்களுடனேயே தங்கப் போவதாகவும் அந்த அதிர்வுகள் என்றும் வழிகாட்டும் என்றும் கருதிக்கொண்டிருந்த அந்த விநாடியில் எல்லோரும் மறைந்துவிட்டனர். தம்மை மறந்து ஆனந்தத்தில் ஈடுபட்டிருந்த அடிகளார் கண்களைத் திறந்தவுடன் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாயினார். மறைந்த அடியார் கூட்டத்தோடு தம் மனத்திடைத் தோன்றிய அமைதியும் மறைந்துவிட்டதை அறிந்த அடிகளார் பலவாறு புலம்புகிறார்.