பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோயில் திருப்பதிகம் 303 தனிப்பயன் உண்டு என்பதை உணர்வதோர் உணர்வே' என்ற சொற்கள்மூலம் விளக்குகிறார். இதைப் புரிந்துகொள்ள அடிகளார் கூறும் மூன்று 'உணர்வுகளையும் நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும். முதலாவது உணர்வு (உரை உணர்வு) பொறி, புலன்கள், நான் என்பவற்றோடு தொடர்புடையது. அவர் கூறும் இரண்டாவது உணர்வு (உரையிறந்த உணர்வு நான்’ முதலிய எதனோடும் சம்பந்தப்படாமல் நிற்கும் ஒர் உணர்வாகும். இந்த உணர்வு அடிகளார் போன்ற அருளாளர்களிடம் மட்டுமே தோன்றுவதாகும். இந்த உணர்வு எங்கே தோன்றுகிறது என்ற வினாவை எழுப்பினால் விடைகூறுவது இயலாத காரியம். இந்த இரண்டாவது உணர்விற்கு உள்ள தனியான இலக்கணம், 'நான் முதலிய எதனோடும் இது சம்பந்தப்படாதது என்பதுதான். § இந்த உணர்வு ஒன்றினால்மட்டுமே இறைவனை அனுபவிக்க முடியும். அறிதல், தெளிதல், கேட்டல், சிந்தித்தல் ஆகிய ஒன்றும் இந்த இரண்டாவது உணர்விற்கில்லை. இறைப் பொருள் தவிர்ந்த எந்த ஒன்றையும் அது அனுபவிக்கவோ உணரவோ செய்யாது. இறைப்பொருள் ஒன்றைத்தான் இந்த இரண்டாவது உணர்வு அறியும்; அந்த ஒன்றைத்தான் அது அனுபவிக்கும். அனுபவிக்கத் தொடங்கும்பொழுது இந்த இரண்டாவது உணர்வு தனியே நிற்க, இறைப்பொருள் எதிரே நிற்கின்றது. இது இறைப்பொருளில் ஈடுபட, ஈடுபட, அது இறையனுபவமாகப் பழுத்துவிட்ட நிலையில் (முழு அனுபவ நிலை) இரண்டாவது உணர்வு இறையனுபவம் ஒன்றில் அமிழ்ந்து தன் தனித்தன்மையை இழந்துவிடுகிறது.