பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 தமிழகத்தில் ஆங்காங்கே ஒரளவு காணப்பெற்றன. ஆனால், போற்றித் திருஅகவலில் மிண்டிய மாயாவாதம் என்னும் சண்டமாருதம் சுழித்து அடித்து (திருவாச. 4-54,55 என்று சொல்லிய ஓர் இடத்தைத் தவிர வேறு குறிப்பொன்றும் திருவாசகத்தில் இல்லை. ஆனால், அருகிக் காணப்பட்ட பெளத்தர்களும் நாத்திக வாதத்தினரும் சிவபெருமானையும் உமையொருபாகனையும் எள்ளி நகையாடி ஆங்காங்கே பேசியிருப்பர்போலும். அதனாலேயே திருச்சாழல்போன்ற பகுதிகள் இங்கு இடம்பெறலாயின. திருச்சாழல், திருவுந்தியார் என்ற பகுதிகள் அறிவுக்கு விருந்தாக அமைந்துள்ளன. இறைவனுடைய வேடம், உமையோடிருத்தல் முதலியவற்றிற்கு விளக்கம் தர முயல்கின்றது திருச்சாழல். ஆனாலும், இறைவன் கொண்ட வேடத்திற்கும், செயல்களுக்கும் தத்துவ ரீதியாக அந்த விளக்கம் அமையவில்லை. ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான்’ என்ற முறையில்தான் முற்பகுதி விளக்கம் அமைந்துள்ளது. இறைவனை ஆண் பெண் வடிவாகக் காணுதலும் சக்தியும் சிவமும் சேர்ந்திருக்கும் அர்த்தநாரி வடிவாகச் சிந்தித்தலும் இந்நாட்டில் தோன்றிய சைவத்தின் தனிச் சிறப்பாகும். பிரபஞ்சம் முழுவதிலும் நிறைந்துள்ள எல்லாப் பொருள்களும் நேர் ஆற்றல் (positive force) எதிர் ஆற்றல் (negative force) என்ற முறையில்தான் அமைந்துள்ளன என்ற பேருண்மையை என்றோ கண்டுகொண்ட நம் முன்னோர், இவை அனைத்திற்கும் மூலகாரணமாகவுள்ள இறைவனும் சிவம், சக்தி என்ற இரண்டின் கூட்டமாகவே அமைந்துள்ளான் என்று கண்டனர். இக்கருத்தை யெல்லாம் திருச்சாழலில் வினா விடை வடிவில் அடிகளார் பாடியுள்ளார். ஆனாலும் தம்