பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 353 அனுபவத்தை நினைந்து நினைந்து உருகியுருகிப் பாடும் பாடல்களின் இடையே, இந்தத் தத்துவ ஆராய்ச்சியும் வினா விடையும் எவ்வாறு, ஏன் இடம்பெற்றன என்பது விளங்கவில்லை. இதேபோலத் திருவுந்தியாரிலும் திரிபுரக் கதையும் தக்கன் கதையும் விரிவாக இடம்பெற்றுள்ளன. அப்பாடல்களிலும் இறையனுபவப் பகுதி எதுவும் இல்லை. சிவபெருமானுடைய பெருமையைக் கூறுவதற்கு இப்பகுதிகளை இடமாகக் கொண்டாரே தவிர, ஏனைய பாடல்களில் காணப்பெறும் உருக்கம், அனுபவம், ஆனந்தமேலிடு என்பவை திருச்சாழல், திருவுந்தியார் போன்ற பகுதிகளில் ஒரு சிறிதும் இடம்பெறவில்லை. திருவுந்தியாரின் மூன்றாவது பாடல் மயன் செய்த பொற்றேரில் ஏறித் திரிபுர சம்ஹாரம் செய்யப் புறப்பட்டார் என்றும் இவர் திருவடியை வைத்தவுடன் தேரின் அச்சு முறிந்தது என்றும் பேசுகிறது. இக்கதை பிற்காலத்தில் வேறு வடிவம் தாங்கி 15ஆம் நூற்றாண்டில், அருணகிரியார் காலத்தில் விநாயகரே அச்சை முறித்தார் என்ற புதியவடிவில் வெளிவரலாயிற்று. திருச்சாழல் வினா விடைப் பகுதி என்பது உண்மைதான் என்றாலும், இதனை அகத்துறையின்பாற் படுத்தி இயற்பட மொழிதல், இயற்பழித்து மொழிதல் என்றெல்லாம் பொருள்கொள்வது பொருத்தமாகத் தெரியவில்லை. காணேடி’ என்ற ஒரு விளி வருவதால், தலைவி, தோழி என்ற இருவரிடையே இந்த உரையாடல் நடைபெறுவதாகக் கொண்டுள்ளனர். இவ்வாறு கொள்வதில் தவறில்லை என்ற அடிப்படையில், சிந்தனைப் பகுதி வரையப்பெற்றுள்ளது. அப்படியிருந்தாலும் தலைவி, தோழி, இயற்பட மொழிதல், இயற்பழித்து மொழிதல் என்பவை பொருத்தமுடையனவா என்ற வினா மனத்துள் இருந்துகொண்டே இருக்கிறது.