பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 - திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 திருவாசகம்போன்ற ஆயிரக்கணக்கான பாடல்கள் அவன் பெருமையைப் பாடுகின்றனவே, அது எவ்வாறு முடிந்தது? அவன் செயலை அறிந்து பாடப்பட்டவையா இப்பாடல்கள் என்றால், இல்லை என்றே விடை கூறவேண்டும். இப்பாடல்களைப் பாடிய பெருமக்கள் அவன் செயல்கள் என்று தம்முடைய இறையனுபவத்தில் தோன்றிய சிலவற்றை அடிப்படையாகக் கொண்டே இப்பாடல்களைப் பாடினர். எனவே, இறைவன் செயலை இச்சிற்றுயிர்கள் அறியமாட்டா என்பது தேற்றம். இறைவனைப் பொறுத்தமட்டில் தான் செய்யும் செயல்களை அவனாவது அறிவானா என்றால், இல்லையென்றே கூறவேண்டும். அவனுடைய செயல்கள் இச்சா மாத்திரத்தில் நிகழ்பவை ஆதலின் அவை நிகழ்வதை அவன் அறிய முற்படுவதில்லை. இந்த நிலையில், தன் செயலைக்கொண்டு தன்னுடைய பெருமை எத்தகையது என்பதை அவன் கணிக்க முற்படுவதில்லை. இந்த நுணுக்கமான தத்துவத்தைத்தான் ‘தம் பெருமை தானறியாத் தன்மையன் காண் சாழலோ என்று பாடுகிறார். 270 ஆம் பாடல் வினா விடை முறையில் அமையாத பாடலாகும். இப்பாடலின் முதலிரண்டு அடிகளில் அறம் என்ற தமிழ்ச்சொல் அதன் முழுவீச்சுடன் பயன்படுத்தப் பெற்றுள்ளது. ஆனால், சொற்களின் அமைப்பு முறையை நன்கு கவனித்தால் ஒழிய, இதனை விளங்கிக்கொள்ள முடியாது. ஆலின் கீழிருந்து நால்வர்க்கு வேதத்தை உரைத்தான் என்றோ, வேதத்தின் அறத்தை உரைத்தான் என்றோ சொல்லவில்லை. நான்மறையின் உட்பொருளை' என்ற சொல்லைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.