பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 திருப்பூவல்லி திருப்பூவல்லியில் வரும் இருபது பாடல்களும் திருப் பெருந்துறை நிகழ்ச்சி, மதுரை நிகழ்ச்சி என்ற இரண்டுக்கும் அதிக இடம்தந்து பாடப்பெற்றுள்ளன. பழைய நிகழ்ச்சி களைத் திரும்பச் சொல்லும்போது புதியபுதிய கோணங் களில் நின்று அவற்றைக் காண்கின்றார் அடிகளார். உதாரணமாகக் குருநாதர் திருவடிகளை அடிகளார் தலைமேல் பதித்ததை இதுவரை பல இடங்களில் கூறியுள்ளரேனும் பூவல்லியின் முதற் பாடல் புதிய கோணத்தில் அதனைச் சிந்திக்கின்றது. 'சுற்றிய சுற்றத் தொடர் அறுப்பான்’ (திருவாச. 194) என்று முன்னர்ப் பாடிய அடிகளார், அதே செயலை வேறு கோணத்தில் நின்று கண்டு, 'இணையார் திருவடி என் தலைமேல் வைத்தலுமே, துணையான சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன்’ (திருவாச. 275) என்று பாடுகிறார். திருவடியை வைத்தலாகிய செயலும், சுற்றம் துறத்தலாகிய செயலும் உடன் நிகழ்ச்சிகளாக ஒரே நேரத்தில் நடந்துவிட்டதாகக் கூறுகிறார். துறந்து ஒழித்தேன் என்று கூறாமல் துறந்து ஒழிந்தேன்’ என்று கூறியதால் துணைச் சுற்றங்களை அதிக முயற்சி எடுத்துக்கொண்டு துறக்கவில்லை என்றும், அது மிக எளிதாகத் தம்மை விட்டுக் கழன்றுவிட்டது என்றும் விளங்கவைக்கிறார். இனி, துறந்தொழிந்தது யாரை என்ற வினாவிற்குச் சுற்றம் என்பதே விடையாக முதற்பாடலில் வருகிறது. சுற்றம் என்ற இச்சொல் பரந்துபட்ட பொருளை உடையது. இரத்தக் கலப்புடைய உறவினர், பதவியால் வந்த சுற்றம் (பரிவாரம்) ஆகிய இரண்டையும் சுற்றங்கள்' என்ற பன்மை வாய்பாட்டால் அடிகளார் குறிப்பிடுகின்றார். தந்தை, தாய், உடன்பிறந்தார், மனைவி, மக்கள்