பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. திருக்கழுக்குன்றப் பதிகம் (சற்குரு தரிசனம்) இப்பதிகத்தில் வரும் ஒவ்வொரு பாடலும் 'காட்டினாய் கழுக்குன்றிலே’ என்று முடிவதால் திருக்கழுக்குன்றப் பதிகம் என்று பெயரிட்டனர். பதிகம் என்று பெயர் வருவதற்கேற்ப ஒரு காலத்தில் பத்துப் பாடல்களுடன் இப்பதிகம் இருந்திருத்தல் வேண்டும். தமிழர்களாகிய நம்முடைய கவனக்குறைவு உலகமறிந்த ஒன்றாகும். தமிழின் சுவையைக், கறையான், நெருப்பு, ஆற்று வெள்ளம் ஆகியவை சுவைத்த அளவிற்குத் தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டு பெருமைப்படும் நாம் சுவைக்கவில்லை என்பது நன்கு அறியப்பட்ட ஒன்று. ஒருவேளை மனிதர்களாகிய நாம் அறிந்த தமிழ்ச் சுவையைக், கீழ்நிலையில் உள்ள உயிரினங்களும் சுவைக்கவேண்டும் என்ற பரந்த நோக்கில் கறையான் முதலியவற்றிற்குத் தந்தோம் போலும்! - வட இந்தியாவைப் பொறுத்தவரை பாரசீகத்தார், துருக்கியர் முதலியோர் படையெடுப்புகள் நிகழ்ந்தமையால் அப்பகுதியிலுள்ள கோயில்களும் நூல்களும் சிதைவுண்டன. ஆனால், நம்மைப் பொறுத்தவரை புறத்தே இருந்து வந்த இடையூறு மிகமிகக் குறைவு. 18ஆம் நூற்றாண்டுவரை படையெடுத்து இங்கே வந்து தாக்கியவர் யாருமில்லை. 10ஆம் நூற்றாண்டில் தொடங்கி 13ஆம் நூற்றாண்டு முடியச் சோழப்பேரரசு ஒகோ என்று வளர்ந்தது உண்மைதான். ஆனால், அந்தக் கால கட்டத்தில்தான் தேவாரப் பதிகங்கள் நூற்றுக் கணக்கில் இழக்கப்பட்டன.