பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 முக்குண வயத்தின ராகிய மனிதர்களுக்கு எந்த நிலையிலும், ஒரோவழி ஒரு விநாடியேனும் நற்குணம் தோன்றியே தீரும். அதுவும் தம்பால் இல்லை என்று கூறுவதற்காக, அடிகளார், பாங்கும் பரிசும் தம்பால் இல்லையென்று கூறாமல் இவை என்ன என்றுகூடத் தெரியாத நாயினேன்’ என்று கூறிக்கொள்கிறார். அப்படியிருந்தும் குருநாதர் இவர்மாட்டுச் செய்த அளப்பரிய நன்மைகளை வரிசைப்படுத்திப் பின்னர்ப் பேசுகிறார். குருநாதர் செய்த முதற் காரியம், அடிகளாரிடத்துள்ள மலங்களையும் அதன் விளைவான வினைகளையும் வாங்கி அறுத்தமையாகும். அவர் செய்த இரண்டாவது காரியம், அழியாத (உலப்பிலா) அன்பை அடிகளார் உள்ளத்துத் தோன்றுமாறு செய்தமை ஆகும். மலமும் வினையும் அறுக்கப்பட்டதால் அடிகளாரின் உள்ளத்தில் உலப்பிலா அன்பு குடிபுகலாயிற்று. உலப்பிலா அன்பு என்று கூறியதால், தொடர்புடையார்மாட்டுச் செல்லும் சிறிய அன்புபோல் அல்லாமல், அனைத்து இடத்தும் பரந்து விரியும் அன்பு என்ற பொருளைத் தருவதாயிற்று. இத்தகைய அன்பு குடிபுகுந்த ஓர் உள்ளத்தில் இறைவன் தானே வந்து குடிபுகுவான். அதனையே ஓங்கி உளத்து ஒளி வளர என்ற சொற்களால் தெரிவிக்கின்றார். அதாவது, உலப்பிலா அன்பு நிறைந்த உள்ளத்தில் இறைவன் ஒங்கி வளர்ந்து ஒளிவடிவாக நிரம்பியுள்ளான் என்பதைக் குறிக்கின்றார். - செய்யுள் என்ற காரணத்தால் இம்மூன்று செயலும் முறைமாறி வைக்கப்பெற்றிருப்பினும் மலம் அறுத்து வினைவாங்கல் முதலாவது காரியம், உலப்பிலா அன்பு நிறைதல் இரண்டாவது காரியம், இறைவன் ஒளிவடிவாய் ஓங்கி வளர்தல் மூன்றாவது காரியம் என்ற முறையில் பொருள் கொள்ள வேண்டும்.