பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 ஒரு வினாவை எழுப்பினால், அருமையான விடை கிடைக்கும். இந்தப் பரு உடம்போடு இருக்கின்றவரை எத்தகைய ஆன்ம முன்னேற்றம் பெற்றாலும் உடலோடு ஒட்டிய மனத்தோடுதான் வாழவேண்டியுள்ளது. அந்த நிலை நீடிக்கின்றவரையில் மனக்குரங்கு என்றாவது ஒரு நாள் ஏதாவது ஒரு விநாடியில் தன் புத்தியைக் காட்டாமல் இராது. எவ்வவளவு உயர்ந்த நிலையிலும் இந்த உடம்போடு வாழ்கின்றவரையில் இந்தப் பெரியோர்களும் முக்குண வசத்தராகவே இருப்பர். நம் போன்றவர்களும் முக்குண வசத்தராகவே இருப்போம். அப்படியானால் அவர்கள், நாம் என்ற இரு சாராரிடையே வேறுபாடு என்ன என்ற வினாவை எழுப்பிக்கொண்டு ஆழ்ந்து சிந்தித்தால், நுண்மையான ஒரு வேறுபாட்டைக் காணமுடியும். - நம்முடைய வாழ்நாளில் பெரும்பகுதி, தாமஸ் குணத்திலும் அதற்கு அடுத்த ஒரு பெரும் பகுதி இராஜஸ் குணத்திலும் கழியுமேனும், என்றோ ஒருநாள், ஏதோ ஒரு விநாடியில் சத்துவ குணத்திலும் நாம் ஆழ முடியம். ஆனால், அடியார்களைப் பொறுத்தவரையில் இது தலைகீழாக நடைபெறும். வாழ்க்கையின் பெரும் பகுதி சத்துவ குணத்திலும், ஒரு விநாடி இராஜஸ், தாமஸ் குணங்களிலும் ஈடுபட நேரிடும். இதனால் ஒன்றும் குடி முழுகிப் போவதில்லை. ஆனால், இந்தப் பெருமக்கள், அந்த ஒரு விநாடி நிகழ்ச்சியைப் பெரிதுபடுத்திக் குடியே மூழ்கிவிட்டதுபோல வருந்துவர். காழிப் பிள்ளையார் ஆய மாய காயம் தன்னுள் ஐவர் நின்று ஒன்றல் ஒட்டார், மாயமே என்று அஞ்சுகின்றேன், வலிவலம் மேயவனே (திருமுறை:1-50-7) என்று பாடுவதும் மேலே கூறிய கருத்தை வலியுறுத்தும்.