பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 இந்தப் பொதுவிதி தம்மாட்டு ஏன் பிழைத்தது என்ற வினா அவருடைய மனத்தைக் குடைந்துகொண்டு இருந்ததுபோலும். எனவே, பல பாடல்களில் அந்த அடியார்கள் முன்னே நரிப்பாய் நாயேன் இருப்பேனோ (திருவாச:386) என்று தம்மை ஆட்கொண்டவனிடமே வினவுகின்றார். திருப்பெருந்துறையில் இந்த அனுபவம் எப்படிக் கிடைத்தது? அனுபவத்தைத் தருவதற்கு முன்னர், அதனைப் பெற்றுக்கொள்ளக்கூடிய பாத்திரமாகிய சித்தத்தை ஒழுங்குபடுத்தினார் குருநாதர் என்பதையும் அடிகளார் உணர்கின்றார். அதனையே சீர் ஆர் அருளால் சிந்தனையைத் திருத்தி ஆண்ட சிவலோகா' என்கிறார். இந்தஅடியின் வரும் திருத்தி ஆண்ட' என்ற இரண்டு சொற்களும் இறந்தகால வாய்பாட்டில் அமைந்திருத்தலால் இது திருப்பெருந்துறை நிகழ்ச்சியே என்பது பெற்றாம். இவரோ அடிமை; அவனோ ஆண்டான். அந்த ஆண்டான், இந்த அடிமையை ஆட்கொண்ட அந்த விநாடியே இவருடைய சிந்தனையை முதலில் திருத்தி, பிறகு ஆண்டுகொண்டான். அப்படியிருக்க அந்தச் சிந்தனை, குருநாதர் காட்டிய வழியில் இப்பொழுது செல்லவில்லை. அந்தச் சிந்தனையை அடக்கி, பழைய வழியில் செலுத்தும் ஆற்றல் தம்பால் இல்லை என அடிகளார் உணர்கின்றார். - எனவே, ஆண்டானை அழைத்து, நீதானே என் சிந்தனையைத் திருத்தி ஆண்டாய்? இப்பொழுது அந்தச் சிந்தனை தன்னுள் இருந்த ஆனந்தத்தைப் போக்கடித்து விட்டது. ஆண்டானே! நானுன்னைத் தேடி வரவில்லை. நீதான் உன் கருணை காரணமாக வழியில் அமர்ந்து