பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செத்திலாப் பத்து 15 நான்முகனும் திருமாலும் காணாச் சேவடி என்று பல முறை அடிகளார் பாடியுள்ளார். எனினும், இப்பாடலில் ஞாலம் முதல் திருமால்வரையில் பேசுகிறார். பாடல் ஆதலின் முறை வைப்பு முன்னும் பின்னுமாக உள்ளது எனினும் இந்த முறைவைப்பைச் சீர்செய்துகொண்டால் ஒரு புதிய சிந்தனை தோன்றிட இடம் உண்டாகிறது. ஞாலம், வானோர், இந்திரன், நான்முகன், திருமால் என்ற முறையில் வைத்துப்பார்த்தால், ஒன்றினொன்று மேம்பட்ட நிலையை அடுக்கியுள்ளார் என்பது தெரியும். ஞாலம் என்ற சொல்லில் ஒரறிவு உயிர்முதல் ஆறறிவுள்ள மனிதர்வரை கூறினாராயிற்று. இந்த ஆறறிவு மனிதரிலும் மிகத் தாழ்ந்த நிலையிலுள்ள மனிதர்கள், கல்வி, கேள்வி, அறிவு என்பவற்றில் மிக உயர்ந்தவர்கள், துறவு மேற்கொண்டு புற்றுமாய் மரமாய் நின்று தவம் செய்பவர்கள், இத்தொகுப்பினுள் அடங்காத எல்லையற்ற பக்தி ஈடுபாடு கொண்ட அடியார்கள் ஆகிய அனைவரும் ஞாலம் என்ற சொல்லில் அடங்குவர். அடுத்து நிற்பவர்கள் உலகிடை வாழும்பொழுது சில நற்காரியங்களைச் செய்தவர்கள். ஆனால் பொறி, புலன்களை அடக்காமல் வாழ்ந்த இவர்கள், தாம் செய்த புண்ணியம் காரணமாக மேலுலகம் சென்று இன்பம் அனுபவிக்கும் தேவர்கள், இனி இத்தேவர்களுள் உயர்ந்தவனாகிய இந்திரன் என்போர் ஒருபுறம் இருக்க, கல்விக்கு எல்லையாகிய நான்முகன், செல்வத்திற்கு எல்லையாகிய திருமால் ஆகிய இத்துணைப் பேரும் அவன் திருவடியைக் கண்டிலர் என்றவாறு. இந்த முறைவைப்பே சற்று விநோதமானது. ஞாலம் என்று கூறியமையால் இங்குள்ளவர் அனைவரும் திருவடியை நாடிச் செல்கின்றனர் என்பது பொருளன்று. இறையுணர்வு ஒருசிறிதும் இல்லாமல் கண்டதே காட்சி,