பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிருண்ணிப் பத்து 229 பேசுவதை மாற்றம் என்று கூறுகிறோம். இந்த மாற்றம் முற்றிலும் அவருடைய எண்ணத்தின் ஆளுகைக்கு உட்பட்டதாகும். மாற்றத்திடையான் என்று அடிகளார் கூறியிருப்பின் அவர் பேசும் பேச்சுக்கள் அனைத்திலும் அவன் உள்ளான் என்ற பொருளைத் தரும். ஆனால் 'மறுமாற்றம்’ என்ற சொல்லை அல்லவா அடிகள் பயன்படுத்தியிருக்கிறார். ஒருவர் எழுப்பிய வினாவிற்குத் தரப்படும் விடையே மறுமாற்றம் என்று சொல்லப்பெறும். ஒருவர் தரும் விடை (மறுமாற்றம்0 அவரை நோக்கிக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பொருத்தமாக அமையும், இவ்வாறு வரும் விடையில் விடை கூறுபவருடைய எண்ண ஓட்டங்களுக்கோ தனித் தன்மைக்கோ இடமேயில்லை. வினாவிற்கு விடையளிக்கும் போது அறிவின் துணை கொண்டு, கேட்ட கேள்விக்குரிய விடையைமட்டும் சொற்களால் வெளிப்படுத்துவதால், விடையளிப்பவரின் தனித்துவம் வெளிப்பட வாய்ப்பில்லை. வினாவிற்கு ஏற்ற விடை தரப்பெறும்பொழுது அந்த விடையைத் தருவார் தம்முடைய எண்ண ஓட்டங்களுக்குத் தரும் சொல்வடிவு அன்று அது. எனவே, அடிகளார் மறுமாற்றத்திடையான் என்று கூறும்போது, யார் எந்த வினாவை எழுப்பினாலும் அந்த வினாவிற்கேற்ப எந்த விடையைத் தந்தாலும் அந்த விடையாகவும் இருப்பவன் அவனே என்கிறார். “மாற்றத்திடையான்’ என்று கூறியிருப்பின் அடிகளார் உள்ளத்தில் தோன்றிய எண்ணத்தின் வெளிப்பாடாக வரும் சொல்லில் உள்ளவன் அவனே என்ற பொருள் தரும், அப்படிக் கூறாமல் தம்முடைய மனத்தில் தோன்றும் எண்ணத்தை அல்லாமல் யாரோ ஒருவர் ஏதோ ஒன்றைக் கேட்க, அதற்கு விடை கூறுமுகமாக அடிகளார். ஏதேனும் ஒன்றைச் சொல்லியிருப்பின், அந்த விடையாகவும் உள்ளவன் அவனே என்கிறார்.