பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. பிடித்த பத்து (முத்திக் கலப்புரைத்தல்) பற்றலாவதோர் நிலை இல்லாமல் எங்கும் பரந்தும் விரிந்தும் கடந்தும் இருக்கின்ற பரம்பொருள் தம்முள் வந்து தங்கியதை ஒருசில வழிகளை மேற்கொண்டு அது வெளியே செல்லாமல் பிடித்துத் தம் உள்ளத்துள்ளே அடைத்துக்கொண்டதைக் கூறும் தொகுதி ஆதலின், பிடித்த பத்து என்ற பெயரை, இப்பதிகம் பெற்றுள்ளது. இதுவரை அடிகளார் கூறிவந்த கருத்துக்குப் பெரிதும் மாறுபட்டு நிற்பதாகும் இப்பதிகம். தானே வந்து என் உள்ளம் புகுந்தருளி அடியேற்கு அருள் செய்தான்’ (திருவாச:555 என்றும், தானே வந்தெம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்' (திருவாச160) என்றும், ‘அகம்நெகவே புகுந்தாண்டான் (திருவாச.33) என்றும் பாடியவர் இப்பதிகத்தில் தாமே அரிதின் முயன்று அவனைப் பிடித்துத் தம் உள்ளத்துள் அடைத்துவிட்டதால் அதிலிருந்து எளிதாக வெளிப்பட்டு, அவன் எங்கும் செல்ல முடியாது என்ற கருத்தைப் பதிகம் முழுவதிலும் எங்கு எழுந்தருளுவது இனியே? என்ற தொடரால் தெரிவிக்கின்றார். - ... • ‘எங்கு எழுந்தருளுவது இனியே?’ என்ற வினாவை எழுப்புவதற்கு முன்னர், அவ்வாறு இறைவன் வெளிப்போக முடியாது என்பதற்குக் காரணத்தையும் கூறியுள்ளார். எல்லாப் பாடல்களிலும் உன்னைப் பிடித்துவிட்டேன் என்று சாதாரண முறையில் கூறாமல், சிக்கெனப் பிடித்தேன்’ என்று கூறுவதால் அடிகளார் பிடித்த பிடியின் வலு நன்கு விளக்கப்படுகிறது.