பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 தாய்போல் உயிருக்கு வேண்டுவனவற்றைக் காலமறிந்து அவ்வப்பொழுது தருகின்றான் ஆதலின் பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து என்றார். உடல் உரம் பெறப் பாலை ஊட்டும் தாயைவிட உயிர் உரம்பெற அருளை ஊட்டுபவனாகலின் 'தாயினும் சாலப் பரிந்து என்றார். அடுத்து ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி’ என்கிறார். உள்ளத்தின் உள்ளே உள்ள ஒளியைப் புறத்தே காணப்படும் ஒளியிலிருந்து பிரித்துக் காட்ட உள்ஒளி' என்றார். புறத்தே உள்ள ஒளி சூரியன் முதலியவை காரணமாக எங்கும் நிறைந்து விரிகின்றது. இந்தப் புற ஒளிக்குக் கதிரவன் காரணமாய் இருத்தல்போல உள் ஒளிக்கு இறைவன் காரணமாகவுள்ளான். காலையில் தோன்றும் கதிரவன் வீசும் ஒளியைவிட, உச்சிப்பொழுதில் அவன் வீசும் ஒளி அதிகமாதல்போல இறையருள் என்பது உள்ளத்தில் மெள்ளத் தோன்றிப் பெருவளர்ச்சி அடைகின்றது. இறைவன் அடியவருடைய உள்ளத்தில் நெருங்கி வரவர உச்சிப்பொழுதுச் சூரியன் போல், தொடக்கத்தில் உள்ளத்தில் தோன்றிய ஒளியைப் பெருகச் செய்கிறது. இந்த ஒளியோ உள்ளத்தின் உள்ளே தோன்றுகின்ற ஒன்றாகும். அது தோன்றியதையும், பிறகு வளர்ந்து பெருகியதையும் எவ்வாறு அறியமுடியும்? பல சமயங்களில் யாருடைய உள்ளத்தில் இறைவன் தோன்றுகிறானோ அவர்கள்கூட இந்த உள்ளத்தின் ஒளியை எளிதில் புரிந்துகொள்ள முடிவதில்லை. எனவே, உள்ளத்தில் ஒளி தோன்றிப் பெருகுவதை அறிந்துகொள்ள ஓர் எளிய வழியைக் காட்டுகின்றார் அடிகளார். r இந்த உள்ளொளி பெருகப் பெருக, எல்லையற்ற ஆனந்தம் பெருகுகின்றது; ஏனைய மகிழ்ச்சி, இன்பம்போலத் தோன்றி மறையும் இயல்புடையதன்று