பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை செத்திலாப் பத்து கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விட்டது என்பது இந்நாட்டில் வழங்கும் முதுமொழியாகும். திருப்பெருந்துறை அனுபவம் கிடைத்த அடிகளார் அதில் திளைத்துக்கொண்டிருக்கும்போதே அது கைநழுவி விடுகிறது. அதனை மீட்டுப் பெறவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்ற சிந்தனையில் அடிகளாருக்கு எஞ்சியது கலக்கமே ஆகும். கலக்கத்திற்கு ஒரு காரணமுண்டு. குறிப்பிட்ட வழி, துறைகளில், குறிப்பிட்ட முயற்சியை மேற்கொண்டு ஒன்றை அடைந்திருப்பின், அது கைநழுவிவிட்டபோது ஒரளவு கவலையுண்டாகும் எனினும், அதிகக் கவலைக்கு அங்கு இடமில்லை, காரணம், அதனை அடைவதற்குரிய வழி, துறைகளும் தெரியும்; என்ன முயற்சி செய்யவேண்டும் என்பதும் முன்னை அனுபவம் காரணமாகத் தெரியும். எனவே, அதிகக் கலக்கத்திற்கு இடமில்லை. ஆனால், அடிகளார் பெற்ற அனுபவம் இந்த முறையில் கிடைத்ததன்று. இந்த அனுபவத்தைப் பெறும் வழிமுறைகளும் அவருக்குத் தெரியாது; அதனை அடைவதற்கு எந்த முயற்சியும் அவர் செய்தவரும் அல்லர். ஆனால், ஒன்றுமட்டும் அவருக்கு உறுதியாகத் தெரிகிறது. வெறும் மனித முயற்சியால்மட்டும் அதனை அடைய முடியாது என்பதை அவர் நன்றாக உணர்கின்றார். முயற்சி செய்து தோற்றுப்போனவர்களாகிய நாரணன், நான்முகன் ஆகியோர் பட்டியல் பத்துப் பாடல்களில் ஐந்தில் இடம்பெற்றுள்ளன. இதைக் கூறுவதன் நோக்கம், தம்முடைய முயற்சியால் அந்த அனுபவத்தை மீட்டுப் பெற முடியாது என்பதைத் தெளிவுபடுத்தவேயாம்.